பக்கம் எண் :

30வடமொழி வரலாறு

(3) கீழையாரியம்

     கீழையாரியம் என்பது, வேத ஆரியரின் முன்னோர் வட
கோகித்தானிலிருந்தபோது அவர் மொழிநிலை. அது கிரேக்கத்திற்கு மிக
நெருங்கியதா யிருந்தமை உய்த்துணரப்படும்.

(4) வேதமொழி

     இது பின்னர்க் கூறப்பெறும்.

(5) சமற்கிருதம்

     இதுவும் பின்னர்க் கூறப்பெறும். மேலும், இந் நூலிற் பெரும் பகுதி
சமற்கிருதம் பற்றியதே.

7. இந்திய ஆரியர் வருகை

     இந்திய ஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபோது, கிரேக்கத் திற்கு
நெருங்கிய மொழியைப் பேசிக்கொண்டு ஆடுமாடு மேய்க்கும் முல்லை
நாகரிக நிலையிலேயே இருந்தனர்.

     பன்றி, மாடு, குதிரை முதலிய பல விலங்கிறைச்சியையும் அவர்
உண்டுவந்தனர். சோமக்கொடிச் சாற்றினின்று உருவாக்கிய கள்ளை யுண்டு
களிப்பதும் அதைத் தெய்வமாகப் புகழ்ந்து பாடுவதும் அவர் வழக்கம்.
அக் கள்ளை வழிபட்ட தெய்வங்கட்கும் படைத்தனர்.

     கதிரவன், நெருப்பு, காற்று, மழைமுகில் முதலிய இயற்கைப்
பொருள்களை வணங்குவதும், வேள்வியில் சிறுதெய்வங்கட்கு
விலங்குகளைக் காவுகொடுப்பதும், இறந்த முன்னோர்க்கு உரிய நாளிற்
பிண்டம் படைப்பதுமே அவர் மதம்.

     அவருக்கு எழுத்துமில்லை; இலக்கியமுமில்லை. முன்னோர்
வரலாற்றுக் கதைகளும் சிறுதெய்வ வழுத்துகளும் செவிமரபாகவே
வழங்கிவந்தன. அவருள் அறிவிற் சிறந்த பூசாரியர் (புரோகிதர்) மனமும்,
வேள்வித் தூண், சுருவம், உரல், அம்பு முதலிய உயிரிலாப்
பொருள்களுடன் பேசுவதும், இயங்கும் கார்முகில்களைப் பறக்கும்
மலைகளாகவும் மின்னலை அவற்றை வெட்டி வீழ்த்தும் மழைத்
தெய்வத்தின் வெண் படைக்கலமாகவும் கருதுவதும், இரவு பகலையும்
விடியற்காலத்தையும் தெய்வங்களாகப் போற்றுவதும் போன்ற
சிறுபிள்ளைத் தன்மையளவே வளர்ச்சியடைந்திருந்தது.

     குமுகாய (சமுதாய) அமைப்பு முறையில், அவர் வெவ்வேறு
சரவடியாக (கோத்திரமாக)ப் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு சரவடியும் உறவுத்
தொடர்புள்ள பல குடும்பங்களையும் ஒரு தலைவனையும் ஒரு பூசாரியையும்
கொண்டிருந்தது. தலைவனைப் போன்றே பூசாரியும் அவ்வச் சரவடியிற்
பிறந்தவனாகவே யிருந்தான்.