அவ்விரு கலைகளையும்
பயின்றும் அவைபற்றிய நூல்களை வடமொழியிற்
பெயர்த்தும் வைத்திருந்திருக்கின்றனர்.
ஆரியர்
தமிழ் நூல்களை வடமொழியில் மொழிபெயர்க்கும் போது,
பெயர்ப்புத் தோன்றாவாறு சில வழிகளைக் கையாண் டிருக்கின்றனர்.
அவை, மறு பாகுபாடு (Re-classification), புதுப் பெயரீடு (Change of
nomenclature), மாற்றம் (Alteration), சேர்க்கை (Addition) என்பன.
இது இசைநூலிற் பிறங்கித் தோன்றுகின்றது.
குமரிக்கண்டத்
தமிழ்ப் பாணர், செங்கோட்டியாழ் என்னும் வீணை
வாயிலாக இசை நுட்பங்களையெல்லாம் தம் எஃகுச் செவி யாலும்
கூர்மதியாலுங் கண்டறிந்து; பண்ணும் பண்ணியலும் திறமும் திறத்திறமுமாக
நால்வகைப் பண்கள் வகுத்து, நாற்பெரும் பண்களினின்று நூற்றுமூன்றும்
பன்னீராயிரமுமாக (11991) நரப்படைவாற் பண்பெருக்கி; ஆயப்பாலை
வட்டப்பாலை சதுரப்பாலை திரிகோணப்பாலை என்னும்
பண்திரிவுமுறைகளால் பேரிசைகள் அரையுங் காலும் அரைக்காலுமான
சிற்றிசைகளாக நுணுகும்வகை நுணித்தறிந்து; பெண்ணிற்குப்பின் பண்
என்னுமாறு எல்லையற்ற இன்பம் பயக்கும் முறையில் வளர்த்திருந்த
இசைத்தமிழ் என்னும் தமிழிசையைக் கருநாடக சங்கீதம் எனப் பெயர்
மாற்றி, பாணரைத் தீண்டத்தகாதவரென விலக்கி, பன்னீரிசைக்
கோவையைப் பதினாறிசைக்
கோவையெனக்
காட்டி, ஆகணவுழை (சுத்த மத்திமம்) அந்தரவுழை
(பிரதிமத்திமம்) என்னும் இசை வேறுபட்டால் எழுபத்திரு
தாய்ப்பண்ணென வகுத்து; ஆம்பல், குறிஞ்சி, சுருட்டி, செவ்வழி, தக்கம்,
நாட்டை, நேரிசை, புறநீர்மை, முல்லை, விளரி என்பன போன்ற தூய
தமிழ்ப் பெயர்களை மாற்றிக் கரகரப்பிரியா, சங்கராபரணம், தந்யாசி,
நீலாம்பரி, பைரவி, மத்தியமாவதி, வனஜாட்சி என ஆரிய இடுகுறிப்
பெயர்களையிட்டு, வடமொழியிலும் வடமொழி கலந்த திரவிடத்திலும்
பாட்டுகளை இயற்றிப் பாடி, ஆரியக் கலையாகக் காட்டியிருப்பது
எத்துணை யிரண்டகச் செயல்!
இங்ஙனமே
தமிழ் முதனூல்களையொட்டிய கணிதம், மருத் துவம்
முதலிய பல நூல்களும், காமசூத்திரம், கொக்கோகம் முதலியனவும் பிறவும்,
வெவ்வேறு காலத்து வடமொழியில் இயற்றப்பட்டன.
வடமொழியாளர்
கலைகளையெல்லாம் 64 ஆக எண்ணினர்.
நால்வேதம், ஆறுசாஸ்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு
கலைஞானம் என்று சொல்வது மரபு. கலைகள் என்று எண்ணப்
பட்டவற்றுட் சில, கலைகளல்ல.
|