பக்கம் எண் :

முல்3 (மென்மைக் கருத்துவேர்)21

     மென்கால் = மென்காற்று, தென்றல். "மென்கால் பூவளவிய தெய்த"      (கம்பரா. வனம்புகு. 2).
     மென்சொல் = 1. இனிய சொல் (நாமதீப. 668). 2. அன்பான சொல் (W.).
     மென்பறை = பறவைக் குஞ்சு. "மென்பறை விளிக்குரல்" (ஐங். 86).
     மென்பால் = மருதநிலம். "வளம்வீங் கிருக்கை...மென்பா றோறும்"      (பதிற். 75 : 8).
     மென்பிணி = சிறுதுயில். "மயக்கத்துப் பொழுது கொண்மரபின்      மென்பிணி யவிழ" (பதிற். 50 : 21).
     மென்புரட்டு = கைம்மாற்றிலே பணம் புரட்டுகை (யாழ். அக.).
     மென்புலம் = 1. நீர்வளத்தால் மெல்லிய மருதநிலம். "மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந" (புறம். 42). 2. மணலால் மெல்லிய நெய்தல் நிலம். "மென்புலக் கொண்கன்" (ஐங். 119).
     மென்றொடர் = மெல்லின மெய்யை ஈற்றயலாகக் கொண்ட சொல்.      "வன்றொடர் மென்றொடர்" (தொல். குற்றிய. 1).
     மென்னகை = புன்சிரிப்பு. "கவர்தலைச் சூலி மென்னகை விளைத்து"      (உபதேசகா. சிவவிரத. 163).
     மென்னடை = மெதுவான நடை. "மென்னடை யன்னம் பரந்து      விளையாடும்" (திவ். நாய்ச். 5 : 5). 2. அன்னம் (பிங்.).
     மென்னிலை = நடன நளிநயக் கைவகை (W.).
     மென்மெல = மெல்ல மெல்ல. "மென்மெல வியலி வீதி போந்து"      (பெருங். வத்தவ. 17 : 99).
     மெல்-மெல்கு. மெல்குதல் = 1. மெதுவாதல். "காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள்" (சிலப். 15 : 138, அரும்.). 2 நொய்யதாதல். "மெல்கிடு கவள வல்குநிலை புகுதரும்" (அகம். 56). 3. இளகுதல்.
     ஒ.நோ:
     E. melt, become or make soft by liquifying by heat; OE. meltan,      mieltan, ON. meta (digest).
     E. molten (melted).
     E. smelt (extract metal from ore by melting).
     MDu. or MLG. smelten.
     E. malt, OE. mealt, OS. malt, OHG. malz, ON. malt, cog. w. melt.
     மெல்(லு)தல் = 1. கடின அல்லது விழுங்க முடியாத உணவைப் பல்லால் அரைத்து மென்மையாக்குதல். "மெல்லிலைப் பண்டியும்" (சீவக. 62). 2. விடாது கடிந்து தொல்லைப்படுத்தல். இரவும் பகலும் என்னை மென்றுகொண்டிருக்கின்றான் (உ. வ. ).