|
| மாயம்-மாயன் = 1. கரியன். "வண்ணமு மாய னவனிவன் சேயன்" (தொல். உவம. 30, உரை). 2. திருமால். "மாயனாய் ..... மலரவ னாகி" (தேவா. 1050: 6). 3. வஞ்சகன் (பிங்.). |
| மாயன்-மாயவன் = திருமால். "பெரியவனை மாயவனை" (சிலப். 17, படர்க்கைப் பரவல்). |
| மாயவள் = 1. கரிய நிறமுடையவள். "மாயவண் மேனிபோல்" (கலித். 35). 2. காளி, "மாயவ ளாடிய மரக்கா லாடலும்" (சிலப். 6 59). |
| மாயன்-மாயோன் = 1. கருநிறமுடையோன் (பரிபா. 3: 1, உரை). 2. திருமால். "மாயோன் மேய காடுறை யுலகமும்" (தொல். அகத். 5). | |
| மாயோள் = 1. கருநிறமுடையவள். "மாயோள் முன்கை யாய்தொடி" (பொருந. 14). 2. மாமை நிறமுடைவள். "மாயோள் பசலை நீக்கினன்" (ஐங். 145). 3. வஞ்சகி (W.). 4. காளி. |
| மாய்-மாயை. ஒ.நோ: சாய்-சாயை. மாயை = 1. காளி (பிங்.). 2. மறைப் பாற்றல் (திரோதான சக்தி) - (நாமதீப. 753.) 3. பொய்த் தோற்றம். 4. பொய்த் தோற்றவுரு. 5. மாயக்கலை (மாயவித்தை). "மாயையி னொளித்த மணிமே கலைதனை" (மணிமே. 18 155). 6. வஞ்சகம் (சூடா.). 7. மூல முதனிலை (பிரகிருதி) "பூதலய மாகின்ற மாயை முதலென்பர் சிலர்" (தாயு. பரிபூரணா. 6). |
| மாயை-வ. மாயா. ஒ.நோ: சாயை-வ. சாயா (chaya). சாய்தல் = நிழல் விழுதல். சாயை = நிழல். | | மாள்-மாட்டு(பி.வி.). ஒ.நோ: நீள் - நீட்டு. மாளுதல்=முடிதல். செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல். | |
| நான் இதைச் செய்ய மாட்டுவேன் = என்னால் இதைச் செய்ய முடியும். |
| நான் இதைச் செய்ய மாட்டேன் = 1. என்னால் இதைச் செய்ய முடியாது(முன்னைப் பொருள்). 2. நான் இதைச் செய்ய விரும்பேன் (இற்றைப் பொருள்). |
| இங்ஙனமே, கூடுதல் முடிதல் ஆகிய துணைவினைகளும், உடன்பாட்டில் இயலுதற் பொருளையும், எதிர்மறையில் அல்லது அஃதின்றி அதனொடு விருப்பின்மை அல்லது விலக்குப் பொருளையும் உணர்த்தும். |
| எ-டு: நான் வரக்கூடாது (விலக்கு). |
| நான் சொல்ல முடியாது (இயலாமையும் விருப்பின்மையும்). |
| இப் பொருள்களின் நேர்ச்சி இடத்தையும் காலங் குறித்த சொல்லையும் பொறுத்திருக்கும். |
| எ-டு: நீ சொல்ல முடியாது (இயலாமை மட்டும்). |
| நாளைக்கு நான் இதைச் செய்யமாட்டேன் (விருப்பின்மையும் இயலாமையும்). |