பக்கம் எண் :

தமிழகமும் நிலமும்33

     தமிழ் நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல
நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டி நாட்டில் வீரபாண்டிய நல்லூர்,
அரிகேசரி நல்லூர், மானா பரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய
ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த மன்னர் பெயரை விளக்கி நிற்கின்றன.
சோழ நாட்டில் பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச்
சாசனங்களிற் காணலாம். முடி கொண்ட நல்லூர், அநபாய நல்லூர்,
திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாத சேகர
நல்லூர், கலி கடிந்த சோழ நல்லூர் முதலிய நல்லூர்கள் சோழ மன்னருடைய
விருதுப்பெயர் பெற்ற பதிகளாகும்.

புத்தூர்

     புதியவாகத் தோன்றும் ஊர்கள் புத்தூர் என்று பெயர் பெறும்.
தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுப் பதியொன்று திருப்பத்தூர் என

வழங்கி வருகின்றது. அரிசில் ஆற்றங்கரையில் எழுந்த புத்தூர்
அரிசிக்கரைப் புத்தூர் என்றும், கடுவாய் நதிக்கரையிலுள்ள கடுவாய்க்கரைப்

புத்தூர் என்றும் தேவாரப்பதிகம் குறிக்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள
ஸ்ரீவில்லிபுத்தூர் வைணவர் போற்றும் பெரும் பதியாகும். சுந்தரர் திருமணம்

செய்யப் போந்த புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆயிற்றென்று பெரிய
புராணம் கூறுகின்றது.99 கொங்கு நாட்டில் பழைய பேரூருக்கு அருகே
கோவன் என்னும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன்புத்தூர் என்று
பெயர் பெற்றது. அதுவே இப்பொழுது கோயம்புத்தூராகச் சிறந்து
விளங்குகின்றது.