பக்கம் எண் :

குடியும் படையும் 59

                  3. குடியும் படையும்

       குடியும் படையும் நாடாளும் அரசனுக் குரிய அங்கங்கள் என்று
திருவள்ளுவர் கூறியருளினார்.1 ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும்
அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு
விளங்கும்.
 

இல்

       இக் காலத்தில், ‘இல்’ என்பது பெரும்பாலும் மக்கள் வாழும்
வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப்
பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில்
என்னும் அழகியப் பெயரைப் பெற்றது.2 அன்பின் இருப்பிடம் ஆகிய
அவ்வூர் இப்பொழுது கீழ் அம்பில் என்று வழங்கும். தேவாரப் பாடல்
பெற்ற ஊர்களில் ஒன்று திருப்பாச்சில். அவ்வூர் இப்பொழுது திருவாசி
என்னும் பெயரோடு ஸ்ரீரங்கத்தின் அருகே உள்ளது.

      சில பழம் பெயர்களில் அமைந்த இல் என்னும் சொல், இக்
காலத்தில் ஊர் என்று மாறியிருக்கக் காணலாம். ஆதியில் திருச்செந்தில்
என வழங்கிய ஊர் இப்பொழுது திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகின்றது.
தேவாரத்திலும் சாசனத்திலும் மைலாப்பில் என்று கூறப்படும் ஊர்
பிற்காலத்தில் மைலாப்பூர் ஆயிற்று.3 இன்னும் இடை மருதில் என்றும்,
புடை மருதில் என்றும் பெயர் பெற்ற ஊர்கள் இப்பொழுது முறையே
திருவிடை மருதூர் ஆகவும், திருப்புடை மருதூர் ஆகவும் விளங்குகின்றன.
தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்றாகிய