பக்கம் எண் :

56
 
உள்ள ஒரு தீவின் பெயராகவும் இயங்குகிறது. சாவக நாட்டின் பண்டைக்கால அரசர்
பெயர்களுள் சீர்மாறன் என்ற பாண்டியர் குடிப்பெயர் காணப்படுகின்றது. முற்காலப்
பாண்டியருள் ஒருவனும் பிற்காலப் பல்லவரும் சோழரும், கடல் கடந்த பேரரசுகள்
நிறுவியிருந்தனர்.
 
     அகச்சான்றாக முச்சங்க மரபால் தெரியவரும் தமிழகத்தின் பழமை, பெருமை
ஆகியவை மேற்கண்ட புறச் சான்றுகளால் வலிமை பெறுகின்றன. தொல்காப்பியம்,
கடைச்சங்க நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் நூல்களில் கடலக
வாழ்வு, வாணிகம், யவனர், சாவகம் ஆகியவைபற்றிய ஏராளமான குறிப்புக்கள் காணக்
கிடக்கின்றன.
 
     காதலன் காதலியைப் பிரிந்து ஆண்டுக்கணக்காகக் கல்விக்காகவும், கடல் கடந்த
வாணிகத்துக்காகவும், அரசியல் பணிகளுக்காகவும் செல்வதுண்டு என்று தொல்பழந்தமிழ்
நூலான தொல்காப்பியமே எடுத்துக் காட்டுகிறது.
 
     பாரத இராமாயண காலச் செய்திகளைப் பற்றியும் கி.மு.4-ம் நூற்றாண்டில் கங்கை
வெளியில் ஆண்ட நந்தரைப் பற்றியும், கி.மு. 3-ம் நூற்றாண்டில் சிறிதளவில்
நடைபெற்ற மோரியர் படையெடுப்பைப் பற்றியும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
 
     வரலாற்று நோக்குடன் ஆராய்பவர்க்குத் தமிழ் இலக்கியம் ஒப்புயர்வற்ற ஒரு
வரலாற்றுக் கருவூலம் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. சோழ பாண்டிய மன்னர்
பலரைப் பற்றியும், பல குறுநில மன்னரைப் பற்றியும் அவை நமக்கு எத்தனையோ
செய்திகள் தருகின்றன. அவற்றுள் ஒரு சிலவே இதுகாறும் காலவரிசைப்
படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆராய்ச்சிகளாலும், புதிய கல்வெட்டு, பழம்பொருள்,
புதைபொருள் ஆராய்ச்சிகளாலும் இன்னும் பல செய்திகள் விளக்கப்படலாகும்.
 
பண்டைப் பாண்டியப் பேரரசு
 
     பாண்டியருள் மிகப் பழமை வாய்ந்தவனாக அறியப்படுபவன் புறம் 9ம் பாட்டில்
ஒரு பழம் பாண்டியனின்