பக்கம் எண் :

78
 
     வாதாபியை அழித்த பல்லவப் படைத் தலைவனான பரஞ்சோதியே,
அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவரான சிறுத்தொண்டர். இவர் காலத்தில்
தலைநாயன்மாருள் ஒருவரான திருநாவுக்கரசர் வயது சென்றவராகவும்
திருஞானசம்பந்தர் இளைஞராகவும் இருந்தனர்.
 
     சிந்து கங்கை வெளியின் பேரரசனை வென்ற தென்னாட்டுப் பேரரசன் புலிகேசி.
அவனை வென்று, பல்லவர் தம் புகழின் உச்சியை அடைந்தனர்.
 
     முடியிழந்த இலங்கையரசன் மானவர்மனுக்கு, நரசிம்மவர்மன் அடைக்கலம்
அளித்திருந்தான்.
 
     இரண்டாம் மகேந்திரவர்மன் இரண்டு ஆண்டுகளே ஆண்டான். அடுத்த
அரசனாகிய பரமேசுவர போதவர்மன் 696 வரை இருபது ஆண்டு ஆட்சி
செலுத்தினான். இரண்டாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கிய அரசு மேலைச்சாளுக்கிய
அரசு, கீழைச்சாளுக்கிய அரசு என இரண்டாக நிலவிற்று. இரண்டாம் மகேந்திரவர்மன்,
பரமேசுவர போதவர்மன் இருவர் காலத்திலும் மேலைச்சாளுக்கியருடன் பெரும்போர்
நிகழ்ந்தது. சில சமயம் மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தியனும் சில சமயம்
பல்லவனும் வெற்றி கண்டனர். ஆனால் இறுதியில் விக்கிரமாதித்தன் கையே
மேலோங்கிற்று. அவன் தெற்கே திரும்பிப் பல்லவர் பாண்டியர் ஆகிய இரு
பேரரசுகளுடனும் பெருவளநல்லூர், மங்களபுரம், மருதூர் ஆகிய இடங்களில் போர்
செய்தான். பெருவளநல்லூரில் அவன் முறியுண்டு மீண்டான்.
 
     இரண்டாம் நரசிம்ம வர்மன் 690 முதல் 715 வரை ஆண்டான். தென்னாட்டின்
தலைசிறந்த பழைய கலைப் படைப்புக்களாகிய மாமல்லபுரம் அல்லது
மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைச் சிற்பங்களையும் காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர்
கோயிலையும் கட்டியவன் இவனே.