முகப்பு சொல் தேடல்

'கொங்கு' என்ற சொல் உள்ள பக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 493

சிலர் கிறித்தவர்களாக மதம் மாறிச் சமூகத்தில் மேல்நிலை எய்தினர். சிலர்
ஆங்கிலேயருக்குப் பணிகள் செய்து குடிநலம் எய்தினர். ஆங்கிலேயரிடம்
அவர்களுள் ஆண்கள் ‘பட்லர்’களாகவும், சமையற்காரர்களாகவும்,
சிற்றாள்களாகவும், கையாள்களாகவும், புல்லறுப்பவர்களாகவும், பெண்கள்
தாதிப் பெண்களாகவும், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாதிகளாகவும்,
வீடு கூட்டிகளாகவும் சேர்ந்து பொருளாதார உயர்வு பெற்றனர். ஆங்கிலேயர்
இந்தியப் பெண்களுடன் சில போது நெருங்கிய உறவு கொண்டதால்
அவர்கட்குக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் ஆங்கிலோ-இந்தியர்
என்ற ஒரு புதிய குலமே அமைந்துவிட்டது. ஆங்கிலோ-இந்தியர்
வெள்ளையர் அல்லராயினும் ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப்
போலச் சட்டையணிந்து ஆங்கிலமே பேசி வந்தனர். அதனால் அவர்களுக்குச்
‘சட்டைக்காரர்’ என்று ஒரு பெயரும் ஏற்பட்டது.

     தமிழகத்துக்குத் தனிச் சிறப்பையும், உலகப் புகழையும் பெற்றுத் தந்தது
அதன் துணிவகைகள்தாம். நெசவுத் தொழில் சங்க காலத்தில் அறுவை
வாணிகரிடம் வளர்ந்து வந்தது. அவர்கள் யார் எனத் தெரியவில்லை. சோழர்
பாண்டியர் காலத்திலும் அதைத் தொடர்ந்து இன்றைய நாள்வரையிலும்
அத்தொழில் கைக்கோளர்கள் (செங்குந்தர்கள்) கையிலும், தேவாங்கர்கள்
கையிலும் செழித்தோங்கி வருகின்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் துணி
ஏற்றுமதித் தொழிலுக்கு வளமூட்டியவர்கள் இவ்விரு குலத்தினர்தாம். நெசவுத்
தொழிலில் ஈடுபட்டிருக்கும் மதுரை, உறையூர், கோயமுத்தூர், சேலம்,
சின்னாளப்பட்டி, ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் இத்தொழிலை
நடத்தி வருபவர்கள் கைக்கோளர்தாம். கண்கவரும் ஆரணி, காஞ்சிபுரம்
சேலைகளைக் கண்டு அவற்றின் அழகில் ஈடுபட்டுச் சொக்கிப் போகாத
பெண்கள் தமிழகத்தில் மட்டும் அன்று, இந்தியாவிலேயே இலர் எனலாம்.

வலங்கை-இடங்கைப் பூசல்கள்

     வலங்கை இடங்கை வகுப்பினரிடையே ஏற்பட்டிருந்த பூசல்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளையிலும் முடிந்ததுண்டு.
அப்பூசல்கள் அனைத்தும் இரு வகுப்பினரும் அனுபவித்துவந்த சில
உரிமைகளைப் பற்றியனவாகவே எழுந்துள்ளன. சென்னையில் சர்
ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் (Sir Archibald Compbell) என்பவர் கவர்னராகப்
பதவி ஏற்ற பிறகு வலங்கை - இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன.