வழியில் ஒரு குளம் இருந்தது. அதில் இறங்கி ஜலம் குடிக்கப்போனான். நடுக் குளத்தில் ஒரு கோரைப் புல் நின்றது. அது இவனை நோக்கி: - "ஐயரே, எங்கிருந்து வந்தாய்? எந்த ஊருக்குப் போகிறாய்?" என்று கேட்டது. இவன் தன்னுடைய விருத்தாந்தங்களைச் சொல்லி, "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்பிக்கிறேன். படித்துக் கொள்" என்று கோரை சொல்லிற்று. பிராமணப் பிள்ளை உடம்பட்டான். "நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை அது கற்றுக் கொடுத்தது. இவன் மூன்று வாக்கியங்களையும் பாராமல் சொல்லிக் கொண்டு பின்னும் நடந்து சென்றான். அங்கே ஒரு நரி வந்து அவனை நோக்கி:- "எங்கே போகிறாய்? என்ன சங்கதி?" என்று விசாரணை பண்ணிற்று. இவன் "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். "ஓகோ! சாஸ்திரம் படிக்கவா போகிறாய்! நல்லது, உனக்கு நான் சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன். தெரிந்து கொள்" என்று நரி சொல்லிற்று. இவன் உடம்பட்டான். "ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை நரி போதித்தது. இவன் "ஆஹா! புறப்பட்ட தினத்திலே நமக்கு நாலு சாஸ்திரமும் தெரிந்து போய் விட்டதே, என்ன அதிர்ஷ்டமப்பா, நமக்கு; இந்த நான்கு சாஸ்திரத்தையும் மறக்காமல் வீட்டில் தாயாரிடம் போய்சொன்னால் அவள் நமக்குக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுப்பாள்" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே தன் ஊரை நோக்கிச் சென்றான். போகும் வழியில் இரவாகி விட்டது. ஊர் நெடுந்தூரத்துக்கப்பால் இருந்தபடியால் இடையே இருந்த ஒரு கிராமத்தில் அவ்விரவு தங்கி, மறுநாட் காலையில் அங்கிருந்து புறப்படலாமென்று நினைத்து, அங்கு ஒரு வீட்டு வாசல் திண்ணையிலே போய்ப் படுத்துக் கொண்டான். விடிய ஒரு ஜாமம் ஆனபோது, இவன், கண்ணை விழித்துக் கொண்டு, தான் படித்த நாலு வாக்கியங்களையும் பாடம் பண்ண ஆரம்பித்தான். அப்போது அந்த வீட்டின் கொல்லைப்புரத்தில் கள்ளர் வந்து கன்னம் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் சத்தம் போட்டுச் சந்தை சொல்லிக் கொண்டிருந்தான். |