"என்ன சங்கதி?" என்று கேட்டான். "பெரிய ஆபத்தாம், இன்னதென்று எனக்குத் தெரியாது. சுவர்ணாதேவி தேவரீரை உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டார்" என்றது. பயந்து, நடுங்கிப் போய் குண்டோதர சிங்க மகா சிங்கன் சந்தியாவந்தனத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அப்படியே ஓடி அந்தப்புரத்துக்குள் வந்தது. அங்கு வந்து பார்த்தால் விஷயம் ஒன்றையும் காணவில்லை. மூன்று ஆசனங்கள் போட்டிருந்தன. எருமைச்சி விருத்திமதி ஒன்றின் மேலே வீற்றிருந்தாள். மகாராணி சுவர்ணாதேவி ஒன்றில் வீற்றிருந்தாள். மற்றொன்று வெறுமே இருந்தது. "என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே குண்டொதரன் அந்தப்புரத்திற்குள் புகுந்தான். இவனைக் கண்டவுடன் விருத்திமதியும் சுவர்ணாவும் தம் ஆசனங்களிலிருந்தெழுந்து நின்றனர். "என்ன விஷயம், என்ன விஷயம்?" என்று குண்டோதரன் நெரித்துக் கேட்டான். "விருத்திமதியிடம் கேளுங்கள். அவள் சொல்லுவாள்" என்று சுவர்ணா சொன்னாள். "ஓஹோ பெரிய விபத்து ஒன்றும் இல்லை, அந்த நரிச்சி விஷயம்தான். அவளை விடுவிக்கச் சொல்லி இந்த எருமைச்சி கேட்க வந்திருக்கிறாள். நாம் மடத்தனமாக அளவுக்கு மிஞ்சி மனம் பதற இடம் கொடுத்துவிட்டோம். இருந்தாலும் நம்முடைய பயத்தை வெளியே காண்பிக்கக்கூடாது" என்று மனதில் நினைத்துக் கொண்டு மீசைகளைத் திருகி விட்டு, லேசான ராஜநடை நடந்துபோய் மூன்றாம் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு குண்டொதரன் தொண்டையைக் கனைத்து நேராக்கிக் கொண்டு விருத்திமதியை நோக்கி "என்ன விஷயம்?" என்றான். |