அதற்குச் சந்திரிகை:- "என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம். பூமி நடுங்கிற்றாம். பேய்க்காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப்போய் விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையும் இருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக்கொண்டு வருகிறாள்" என்று தன் குழந்தை பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது. இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக் கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப் பெண் மிகவும் உற்றுநோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப்போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முக மொற்றி முத்தமிட்டாள். அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தப் பணிப் பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள்மீது காதல் கொண்டார். |