பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

நேரும் கஷ்டம் அதிகமிராது. சிநேகிதர்களும் இந்த விஷயத்தில் புதுமை மாறி இது பழஞ் செய்தியாய்விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கி விடுவார்கள். ஊர் வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய சிநேகிதர்கள் கைவிட்டபோதிலும், புதிய சிநேகிதர்கள் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்குச் சிநேகிதரில்லை என்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோகமுள்ளவரை சிநேகிதரில்லை யென்ற குறைவு நேராது" என்றார்.

"இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதில் எனக்குச் சம்மதமில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனசாக்ஷியின் படி நடப்பதே தகும் என்பதை நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன" என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

"அந்தக் காரணங்களை எடுத்து விளக்குங்கள்" என்றார் கோபாலய்யங்கார்.

"முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப் பயிற்சியில்லாதவள். கல்விப்பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதையெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப் பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்" என்று பந்துலு சொன்னார்.