பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

அதற்குப் பந்துலு:- "அப்படி யில்லை யம்மா. இங்கிருந்தாலும் ராஜமகேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலே தான். இவ்விஷயத்தில் சிரத்தை யெடுக்கக் கூடிய நண்பர்கள் எனக்குப் பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடை யெழுதுவார்கள். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன்" என்றார்.

"பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது" என்றாள் விசாலாக்ஷி.

"சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய்விடும். பிறகு உன் காரியத்தை முடிக்கு முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே" என்று பந்துலு சொன்னார்.

"அப்படியானால் என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்?" என்று விசாலாக்ஷி கேட்டாள்.

"இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு" என்றார் பந்துலு.

அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.