சங்கரய்யரும், காசியிலிருந்து வந்திருக்கும் பால சந்நியாஸியும், சங்கரய்யருடைய மனைவி பிச்சுவும், விசாலாட்சியும், நால்வரும் அந்த நான்கு நாற்காலிகளின் மீதிருந்து கொண்டு சிற்றுண்டி யுண்ணத் தொடங்கினர். குழந்தை சந்திரிகை கீழே படுத்து உறங்கி விட்டாள். இவளுக்குக் காவலாகக் கீழ இடைச்சி, ஒரு வேலைக்காரி படுத்திருந்தாள். நேர்த்தியான நிலவிலே மிட்டாய்க்கடை சங்கரய்யர் வீட்டு மேடையில், அந் நால்வரும் பல வகையான இனிய பண்டங்களை மெல்ல மெல்ல எடுத்துண்டு கொண்டிருக்கையிலே சங்கரய்யருக்கும் காசியிலிருந்து வந்த சந்நியாஸிக்கும் வேதாந்த விஷயமான சம்பாஷணை தொடங்கிற்று. சங்கரய்யர் வேதாந்த கிறுக்குடையவர். அதனாலேதான், அவர் இந்த சந்நியாஸியைக் கண்டு பிடித்தவுடனே பரம குருவாக பாவித்துத் தம் வீட்டுக் கழைத்து வந்து தம்முடனேயே சில தினங்கள் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டார். சந்நியாஸியின் பெயர் நித்யானந்தர். அவருக்கு வயது இருபத்தெட்டுக்கு மேலிராது. மகாசுந்தர ரூபி. வடிவெடுத்த மனமதனைப் போன்றவர். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே நமது விசாலாட்சி அவர் மீது அடங்காத மையல் கொண்டு விட்டாள். சந்நியாஸியும் அங்ஙனமே விசாலாட்சியின் மீது பெரு மையல் பூண்டார். சந்நியாஸி மையல் கொள்ளுதல் பொருந்துமோ என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது சரியான கேள்வியன்று. மன்மதனுடைய பாணங்கள் யாரைத்தான் வெல்ல மாட்டா? 'காற்றையும் நீரையும் இலையையும் புசித்து வந்த விசுவாமித்திரன் முதலிய மகரிஷிகள் கூட மன்மதனுடைய அம்புகளை எதிர்த்து நிற்க வலிமையற்றோராயினர்' என்று பர்த்ருஹரி சொல்லுகிறார். எட்டயாபுரம் கடிகை முத்துப் புலவர் தம்முடைய நூல்களுளொன்றில் மன்மதனை எல்லாக் கடவுளரிலும் வலிமை கொண்ட பெரிய கடவுளாகக் கூறுகிறார். |