அதிகாரி அடியார் விசுவாச முள்ளவனாகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னைத்தான் தேடப்போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப் பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குருபூஜை நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச் சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கஞ் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னான். வாழைப்பழச்சாமி சம்மதி கொண்டு மடத்தை ஒப்புக்கொண்டான். இவனுடைய விசேஷ மென்ன வென்றால், இவன் நாளொன்றுக்கு இருபது வாழைப்பழம் தின்று ஒரு மிடறு தண்ணீர் குடிப்பான். அதன் பிறகு ஜலபானம் கிடையாது. இவனும் ஒரு கிளி வளர்த்தான். அதற்கும் கங்கா மங்கா என்று கற்றுக்கொடுத்து, அதையும் சுகப்பிரம ரிஷியென்று சொன்னான். ஆனால் பிரசங்கம் செய்வதில் பழைய சாமியாருக்குள்ள திறமையில் நூற்றிலொரு பங்கு கூட இவனிடம் கிடையாது. ஆகையால் இவனுக்குப் பழைய வரும்படியில் நூறிலொரு பங்குகூடக் கிடையாது. இருந்தாலும் சொற்பத்தைக் கொண்டு ஒருவாறு வாழைப் பழச் செலவை நடத்தி வந்தான். இப்படி யிருக்கையில் ஒருநாள் நாலைந்து புதிய சீடருக்குக் கந்தபுராணம் சொல்லத் தொடங்கி வாழைப்பழச்சாமி தனது சுகப்பிரம ரிஷியிடம் கேள்வி போட்டுக் கொண்டிருக்கையிலே, திடீரென்று மடத்துக்குள் பழைய மிளகாய்ப்பழச்சாமி தனது கிளிக்கூடு சகிதமாக வந்து தோன்றினான், சாமிக்கும் சாமிக்கும் குத்துச் சண்டை. மிளகாய்ப் பழச்சாமி காலை வாழைப்பழச்சாமி கடித்துக் காலிலே காயம். வாழைப்பழச்சாமிக்கு வெளிக்காயம் படவில்லை. உடம்புக்குள்ளே நல்ல ஊமைக் குத்து. அப்போது வந்த ஜ்வரத்தில் ஆறு மாசம் கிடந்து பிழைத்தான். குத்துச் சண்டையின் போது கிளியும் கூட்டுக்குள் இருந்தபடியே ஒன்றுக்கொன்று கங்கா மங்கா என்று அம்பு போட்டதுபோல் தூஷணை செய்து கொண்டன. அந்தச் சமயத்தில் ஊர்க்கூட்டம் கூடி, அதிகாரியிடமிருந்து சேவகர் வந்து இரண்டு பரதேசிகளையும் பிடித்துக்கொண்டு போய் நியாய ஸ்தலத்தில் விட்டார்கள். |