"ஐயோ, தாகம் பொறுக்கவில்லையே? என்ன செய்வேன்?" என்று புலம்பினான். "மந்திரத்தை ஜபம் பண்ணு" என்றது அசரீரி. "கரோமி, கரோமி, கரோமி" என்று தாய் மந்திரத்தை மறுபடி ஜபித்தான். "செய்" என்று கட்டளை பிறந்தது. "என்ன செய்வது?" என்றேங்கினான். "சோர்வடையாதே, செய்கை செய்" என்றது தொனி. "என்ன செய்வது?" என்று பின்னொரு முறை கேட்டான். "கல்லிலே முட்டு" என்று கட்டளை பிறந்தது. எழுந்து வந்து குகையை மூடியிருந்த பாறையிலே போய் முட்டினான். மண்டை யுடைந்து செத்தால் பெரிதில்லையென்று துணிவு கொண்டு செய்தான். மண்டை உடையவில்லை. குகையை மூடிச் சென்றவர்கள் அவசரத்திலே அந்தக் கல்லை மிகவும் சரிவாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். பாறை சரிந்து கீழே விழுந்து விட்டது. வெளியே வந்து பார்த்தான். சூரியோதயம் ஆயிற்று. கரோமி, கரோமி, கரோமி; செய்கிறேன், செய்கிறேன், செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தனது ராஜதானி போய்ச் சேர்ந்தான். பிறகு அவனுக்கோர் பகையுமில்லை. |