பக்கம் எண் :

தேவ விகடம்

நாரதர் சொல்லுகிறார்: கிடையாது ஸ்வாமி. நான் அந்தத் தொழிலையே விட்டுவிடப் போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும் தொழிலை ஏறக்குறைய நிறுத்தியாய் விட்டது. மனுஷ்யர்களுக்குள்ளே தான் நடத்தி வருகிறேன்.

பிள்ளையார்: சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்.

நாரதர் சொல்லுகிறார்: விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவன் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவன் பெரிய கர்வி. செட்டிக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன்.

பிள்ளையார்: எப்படி?

நாரதர்: செட்டியின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரியிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உனக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியினிடம் போனால் உனக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டி காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்தில் செட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

செட்டி குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத்தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டி ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டான். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டுப் பிரபு வேண்டிக் கொண்டான்.