கோயில் மூலஸ்தானத்துக் கெதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மாதம் பதினோராந்தேதி திங்கட் கிழமை காலை ஒன்பது மணி நேரத்துக்கு முன்னாகவே நானும் என்னுடன் நாராயணசாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படி யென்றால், மடுவில் ஸ்நானம் செய்துவிட்டு மாந்தோப்புகளில் பொழுது போக்குவோம். புயற்காற்றடித்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். கோயிலைச் சூழ நான்கு புறத்திலும் கண்ணுக் கெட்டினவரை தென்னை மரங்கள் விழுந்துகிடந்தன. பல வளைந்து நின்றன. சில மரங்கள் தலைதூக்கி நேரே நின்றன. புயற்காற்று சென்ற வருஷம் கார்த்திகை மாதத்தில் அடித்தது. ஐந்தாறு மாதங்களாயும், இன்னும் ஒடிந்து கிடக்கும் மரங்களை யெடுத்து யாதேனும் பயன்படுத்த வழி செய்யாமல் ஜனங்கள் அவற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு என்னோடிருந்த நாராயணசாமி சொல்லுகிறான்: "கேட்டீரா, காளிதாஸரே, இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த மரங்களை வெட்டி யெடுத்துக்கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது; கிடந்தால் கிடந்தது; ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமய்யா பாமர தேசம்!" என்றான். நான் அங்கே தனிமையையும் மவுனத்தையும் வேண்டி வந்தவன். ஆனபடியினால் அவனை நோக்கி: "நாராயணா; ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும். தனியிடம்; இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது; எவ்விதமான தொந்தரவும் இல்லை. மடத்துப் பரதேசிகள் கூடப் பிச்சைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று படுத்துத் தூங்கு" என்றேன். அவனும் அப்படியே சரியென்று சொல்லி மேல் உத்திரீயத்தை விரித்துப் படுத்தான். உடனே தூங்கிப் போய் விட்டான். |