நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். "உம்முடைய பெயரென்ன?" என்று கேட்டேன். "நாராயண பரம ஹம்ஸர்" என்று சொன்னார். "நீர் எங்கே வந்தீர்?" என்று கேட்டேன். "உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்" என்று சொன்னார். "சரி, கற்றுக் கொடும்" என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம். 'கா' என்றால் 'சோறு வேண்டும்' என்றர்த்தம். 'கக்கா' என்றால் 'என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே' என்றர்த்தம். 'காக்கா' என்றால் 'எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே' என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. 'காஹகா' என்றால் 'சண்டை போடுவோம்' என்றர்த்தம். 'ஹாகா' என்றால் 'உதைப்பேன்' என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். "போனால் போகட்டும். ஐயோ, பாவம்" என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன். |