"இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்' என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கி விடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம். "கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள். "நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்: |