மற்ற ஏழும் ஏறக்குறைய கிருஷ்ணார்ப்பணம் என்று பலவிதமாகப் பேசினார். "நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம். கணபதி, முருகன், சக்தி முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித் தனியே பிரத்தியேகமான கூத்துவகைகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. கவலையை வெல்லுதல் குறி. கவலை நீங்கினால் ஆட்டமும் பாட்டமும் இயற்கையிலே பிறக்கும். பூர்வீக ராஜாக்கள் அனுபவித்த சுகமும் அடைந்த மேன்மையும் இக்காலத்தில் இல்லை. ராஜயோகியானால் அவனுக்கு நாட்டியம் முதலிய தெய்வக் கலைகள் இயற்கையிலே சித்தியாகும். இங்ஙனம் பிரமராய அய்யர் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு மேற்படி கோயில் தர்மகர்த்தாவாகிய வீரப்ப முதலியாரும் வந்து சேர்ந்தார். வீரப்ப முதலியார் நல்ல தீரன்; பல பெரிய காரியங்களை எடுத்துச் சாதித்தவர். இவருடைய குமாரன் மகா வீரனென்று போர்க்களத்தில் கீர்த்தியடைந்திருக்கிறான். இவர் வந்தவுடனே சம்பாஷணை கொஞ்சம் மாறுபட்டது. ஏதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டு வந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காகிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்நியாசத்துக்கு எல்லாரும் வந்து "சிறப்பிக்கவேண்டும்" என்ற அழைப்புக் காயிதம். அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின் வருமாறு:
|