பக்கம் எண் :

மாலை நேரம்

காற்றைப் பாடுகிறோம்

.     அஃதே அறிவிலே துணிவாக நிற்பது.

உள்ளத்திலே சலனமாவது.

உயிரில் உயிர், உடம்பில் வலிமை.

வெளி யுலகத்தில் அதன் செய்கையை அறியாதார் யார்? அறிவார் யார்? காற்றுத் தேவன் வாழ்க.

மழைக்காலம். மாலை நேரம். குளிந்த காற்று வருகிறது.

நோயாளி உடம்பை மூடிக் கொள்ளுகிறான், பயனில்லை.

காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது.

உயிர் காற்றாயின் அதற் கஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக.

அது நம்மை நோயின்றிக் காத்திடுக.

மாலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.

அதனால், காற்றுத் தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்.

காற்றுத் தேவனை வணங்குவோம்.

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது.

எவ்விதமான அசுத்தமும் கூடாது.

காற்று வருகிறான்.