பக்கம் எண் :

குழந்தைக் கதை

ராமபுரம் என்ற ஊரில் வட கோடித் தெருவில் ஒரு பெண் குழந்தை தன் வீட்டு மேடையில் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து பச்சை நூலில் ஊசி கோர்த்துத் தையல் வேலை செய்து கொண்டிருந்தது.

அப்போது நேர்த்தியான காலை வெயிலடித்தது. அவ்வீட்டைச் சுற்றி நாற்றிசைகளிலும் நெருங்கி வளர்ந்திருந்த தென்னை, முருங்கை, ஆத்தி, வாழை முதலிய பசுமரங்களின் இலைகள் இள வெயில் இன்பத்திலே களி கொண்டு நின்றன. காக்கை, புறா, கிளி, சிட்டுக் குருவி, நாகணவாய், ஓரிரண்டு மரங்கொத்திக் குருவிகள் முதலிய பக்ஷிகள் ஓடிப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டு உலாவின.

இந்தச் சமயத்தில் தெருவில் ஒருவன் "வெல்லம் வாங்கவில்லையா, வெல்லம்" என்று கூவிக்கொண்டு வந்தான். அக் குழந்தை யிருந்த வீட்டுக் கெதிர் வீட்டு வாயிலில் சுமார் நாற்பது வயதுடையவராகத் தோன்றிய கிருகஸ்த ரொருவர் நின்று கொண்டிருந்தார். அவர் பார்வைக்கு வேளாளரைப் போலிருந்தார். அந்த முதலியார் வெல்ல வியாபாரியை நோக்கி: "ஏ, யாரப்பா வெல்லம் இங்கே கொண்டுவா" என்றார். வெல்ல வியாபாரி நாட்டுப்புறத்தான். அவனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும், முழங்காலுக்கு மேல் இடுப்புவரை ஓரழுக்குத் துணியை வளையக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய பிரப்பங் கூடையில் வெல்லத்தை வைத்துத் துணியால் மூடி அதைத் தலைச்சும்மாட்டின் மேலே சுமந்து கொண்டு வந்தான். முதலியார் வீட்டு வெளித் தாழ்வாரத்தில் கூடையை இறக்கினான். அப்போது அங்கு பக்கத்து வீட்டிலிருந்து ஒரு செட்டிச்சியம்மா வந்து சேர்ந்தாள். இவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும்: விதவை. சிவப்புத் துணி கட்டியிருந்தாள்.

ரவீந்திர நாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற் பங்கு காயாகவுமிருந்தது. அதாவது, முக்காற்பங்கு நரை; பாக்கி நரையில்லை.