பக்கம் எண் :

பேய்க் கூட்டம்

"நான் தான் வேணு முதலி. என்னுடன் கடோற்கசனும் இன்னும் மூன்று சிநேகிதர்களும்" என்றது. "வேணு முதலியா! இந்த நேரத்தில் - பேய்களெல்லாம் ஸந்தியாவந்தனம் பண்ணப் புறப்படுகிற சமயத்தில் - வந்து கதவைத் தட்டுகிறாயே! உனக்குப் பயித்தியமா?" என்று கேட்டேன். அப்போது வேணு முதலி சொல்லுகிறான், "நான் மாத்திரமில்லை. ஐயரே, நானும் என்னுடன் நான்கு பேரும் இருக்கிறோம். எங்கள் அத்தனை பேருக்கும் பயித்தியம் - நீர் மாத்திரம் புத்திசாலியா? கதவைக் கீழேவந்து திறவும். ஏதோ முக்கியமான காரியம் இருக்கக் கண்டு தான் வந்து கதவைத் தட்டுகிறோம். இல்லாவிட்டால் வருவோமா?" என்றார்.

"காரியத்தைச் சொல்" என்றேன். அப்போது வேணு முதலி: "இங்கிருந்து சொல்ல முடியாது. நீர் தயவு செய்து இறங்கி வாரும்" என்றான். சரி காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழியத் தீராது. விதியைத் தள்ளினாலும் தள்ளலாம், வேணு முதலியை விலக்க நம்மால் முடியாது. தவிரவும் நமக்கும் தூக்கம் வரவில்லை. இவன் ஏதோ செய்தி கொணர்ந்திருப்பான். அதைக் கேட்கும்போது, போது போக்க இடமுண்டாகும்" என்று யோசனைப் பண்ணிக் கீழே இறங்கிப் போய்க் கதவைத் திறந்தேன். பளிச்சென்று என் கண்களில் எவனோ துணியை வரிந்து கட்டினான்.

ஒருவன் என் வாய்க்குள்ளே துணியைச் செலுத்தினான். ஒருவன் கையைக் கட்டினான் மற்றொருவன் காலைக் கட்டினான். கண் மூடித் திறக்கு முன்னே என்னைக் குண்டுக் கட்டாகக் கட்டி ஒரு குதிரை வண்டிக்குள் தன் வசமின்றிப் போட்டார்கள். குதிரை வண்டி வாயு வேகமாப் பறக்கிறது. வண்டி ஓடும்போதே என் மனதில் யோசிக்கலானேன்.

"ஐயோ! என்ன செய்வோம்! வேணுமுதலியின் குரலைப் போல் தானேயிருந்தது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டானே! இப்போ தொன்றும் தெரியவில்லையே! கண்களை அடைத்து விட்டார்களே! வாய் பேச வழியில்லையே! நான் அசையவொட்டாமல் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்கிற பாதகன் யாரென்பதும்