பக்கம் எண் :

மாதர் - பெண் விடுதலை (3)

அப்பால் மேற்படி கூட்டத்தில் சகுந்தலா பின்வரும்பாட்டுப் பாடினாள்.

சீனபாஷையில் 'சீயூ சீன்' என்ற ஸ்திரீ பாடியபாட்டின் தமிழ் மொழி பெயர்ப்பு.

விடுதலைக்கு மகளி ரெல்லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
திட மனத்தின் மதுக் கிண்ணமீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்
" உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும்
ஒரு நிகர் செய் துரிமை சமைத்தாள்,
இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர்
இதற்கு நாமொருப்பட்டிருப்போமோ?           (1)

திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்.
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவிலாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண் களெனி லவரோடும்
சிறுமை தீர நந்தாய்த் திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம்
அற விழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே         (2)

விடியு நல்லொளி காணுதி நின்றே 
மேவு நாக ரீகம் புதிதொன்றே!"     
கொடியர் நம்மை யடிமைக ளென்றே,
கொண்டு தாமுதலென்றன ரன்றே!
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே.               (3)

அப்பால் சில பெண்கள் பேசினர். மங்களப் பாட்டுடன்'மஞ்சள் குங்கும'க் கூட்டம் முடிவு பெற்றது.