பக்கம் எண் :

கலைகள் -  தமிழருக்கு

தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. ''முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்'' என்றுதீர்மானம் செய்துகொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்குஏற்பட்டிருக்கிறதா?  ''தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லிய மூடர்கள் உப்புநீரைக் குடிக்கிறார்கள்'' என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள்  காட்டியிருக்கிறார்கள். அவை அறம், "பொருள், இன்பம், வீடு - என்பன.

இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. பிறர் என்பதனுள் வையகம் முழுதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல் இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இச் செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்துக்களை அனுபவிப்பது. இவ் வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள்புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகு முடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக.

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு' என்ற சொல்லுக்கு "விடுதலை" என்பது பொருள். மேற்கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை யருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கை கூடுக!