"மனிதர் பிறவுயிர்களைத் தின்னாதபடி செய்யும் வழியுண்டு" என்று ராஜகோவிந்தன் சொன்னான். "எப்படி?" என்று சந்திரத்தீவின் ராஜாவாகிய கங்காபுத்ரன் கேட்டான். அப்போது ஸூதாமன் சொல்லுகிறான்:- "அரசனெப்படி அப்படி மன்னுயிர்." ராஜா ஸ்திரீகளையும், மற்ற மனிதரையும் அடிமையாகக் கருதாமலிருந்தால் நாட்டில்ஸமத்வ முண்டாகும். ஒரு நாட்டில் நிலையுற்றால் எல்லா நாடுகளிலும் சீக்கிரத்தில் பரவிவிடும். கெட்ட வழக்கங்களைப் போலவே நல்ல வழக்கங்களையும் பூமண்டலத்து ஜனங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கைக்கொள்ளுதல் மரபே"என்றான். அப்போது மந்திரி ராஜகோவிந்தன் சொல்லுகிறான்:- "நாட்டில் அரசன் எவ்விதமான ஆஹார முண்கிறானோ, அதுபோன்ற ஆஹாரமே சகல ஜனங்களுக்கும் என்று ஏற்பாடு செய்யவேண்டும். அங்ஙனம் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நீங்கிப்போம்" என்றான். அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான்:- "நமது சந்திரத் தீவை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள மனிதர் அத்தனை பேரும் மாம்ஸம் தின்பதில்லையென்று வைப்போம்; இத்தனை பேருக்கும் தின்ன சாக பதார்த்தங்கள் நம் தீவிலில்லையே?" என்றான். "வருஷந்தோறும் இரண்டு லக்ஷம் சாக்குத் தேங்காய்களும் மூன்று லக்ஷம் சாக்கு மற்றப் பழவகைகளும் பாரத தேசத்துக்கு நம் நாட்டினின்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன" என்று மந்திரி சொன்னான். அப்போது ராஜா கங்காபுத்ரன் சொல்லுகிறான |