பக்கம் எண் :

கலைகள் - ஜப்பானியக் கவிதை்

'தீப்பட்டெரிந்தது, வீழுமலரின் அமைதியென்னே!'

"மலர் தனக்கு வாழுங் காலம் மாறிக் கீழே விழும் போது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ, அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகின்றான்.'வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம்அமைதியிழந்து போகவில்லை' என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்."

'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மை' யென்று நோகுச்சிப் புலவர் சொல்லுவதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது;"கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் "ஹொகூஷி" பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு."