பக்கம் எண் :

தத்துவம் - இனி

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.

அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள். எத்தனை காலம் ஒரு மோசக்கார மனிதனை மூடிவைத்து அவனிடம் தெய்வங் காட்ட முடியும்?  ஆகையால் இந்தப் பூசாரிகளுடைய சாயம் "சீக்கிரம் வெளுத்துப் போகிறது. ஜனங்கள் பூசாரிகளை அவமதிப்பாக நடத்தி, பழைய மாமூலை உத்தேசித்துக் கல்லை மாத்திரம் கும்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட கல் வரம் கொடுக்கவே கொடுக்காது. எப்படிச் சாதாரணமாக ஒரு கல்லில் நல்ல சாதுக்கள் பக்தியுடன் மந்திரம் ஜபித்துக் கும்பிட்ட மாத்திரத்தில் பகவான் நேரே வந்து நர்த்தனம் பண்ணுவாரோ, அதுபோல் யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் அந்தக் கல்லை விட்டுப் போய் விடுவார். அது மறுபடி சாதாரண ரஸ்தா உருளை ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.

கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி: தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, புழு, எறும்பு - ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன் மீது ஸகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் ஸந்தேஹமே கிடையாது.

பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் நீங்கினாற் கலி இல்லை; உலகம் முழுதும் கலி இல்லை. ''உலகம் முழுதும் அநியாயத்தை விட்டுச் சமீப காலத்தில் நீங்கு மென்று நினைக்க ஏது இல்லை; "ஆதலால் கிருதயுகம் வரப்போவதில்லை நாம் மாத்திரம் ஏன் நியாயம் செய்ய வேண்டும்?'' என்று விபரீதமாக யோசித்து எவனும் தான் நடக்கும் அநியாய வழியிலே தொடர்ந்து செல்லக் கூடாது. எவன் அநியாயத்தை விடுகிறானோ, அவனுக்குக் கிருதயுகம் அந்த க்ஷணமே கைமேலே கிடைக்கும், இதில் ஸந்தேஹம் இல்லை.

ஒருவன் கலியை உடைத்து நொறுக்கினால், அவனைப் பார்த்துப் பத்துப் பேர் உடனே நொறுக்கி விடுவார்கள். இங்ஙனம், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லக்ஷம், கோடியாக, மனித ஜாதியில் ஸத்யயுகம் பரவுதலடையும் காலம் ஏற்கனவே ஆரம்பமாய் விட்டது. இதில் ஸந்தேஹம் இல்லை.