பக்கம் எண் :

தத்துவம் - மூடபக்தி

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல், க்ஷவரம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. "க்ஷவரத்துக்குக் கூட இப்படியென்றால், இனிக்கலியாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்கு மிடத்தே, கார்யநஷ்டம் மட்டுமன்றி மேற்படிலக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

"காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனால் பண லாபம் கிடையாமற்போகும். இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக்கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப் போனால், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும்.

"இத்தகைய மூட பக்திகளெல்லாம் ''படிப்பில்லாமையால் ஏற்பட்டிருக்கின்றன'' என்றும், ''ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக்கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் ஒருவாறு அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால், அதற்குத்தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு, சுத்தமாகப் பிரயோஜன மில்லை என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான - கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூடபக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா?  இல்லை, நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்த பின்புதான் மேற்கூறிய ஸாமான்ய மூடபக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே, இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாக்க்ஷிப்படி யோக்யமாக நடந்து வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் பெரும்பாலோர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அது போலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்.