பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

“நங்கை யென்னோ டுரையாய் நனியொல்லே”      (சீவக. 898)

ஒல் - ஒல்லை = 1. சுருக்காய் (திவா.). 2. உடனே. “ஒல்லைக் கெடும்” (குறள். 563).

ஒல் - வல் = விரைவு (சூடா.)

‘வல்லெனல்’ ஒரு விரைவுக் குறிப்பு.

ஒல்லே - வல்லே = விரைவாக.

“ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க”         (நாலடி. 4)

ஒல்லை - வல்லை = விரைவாக.

“வளவரை வல்லைக் கெடும்”          (குறள். 480)

ஓ - ஒ - ஒய்.

ஒய்யென = விரைவாக.

“ஒய்யென வந்தே யெடுத்தனன்”         (கலித். 37)

ஒல் - கொல் = ஓர் ஒலிக்குறிப்பு.

“கொல்லென்று சிரித்தார்கள்” என்பது உலக வழக்கு.

கொல் - கல். கல்லெனல் = பேரோசைக் குறிப்பு.

“கல்லென் பேரூர்”            (சிலப். வேட்டுவவரி. 12)

“கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற”        (நாலடி. 25)

கல் - கல.

‘கலகலவென்று சிரித்தல்’ என்பது உலக வழக்கு.

கலகலவெனல் - கலகலெனல்.

கல் - கலி. கலித்தல் = ஒலித்தல்.

“கடவுட் பராவி நமர்கலிப்ப”         (திருக்கோ. 279)

கலி = 1. ஒலி. (தொல். சொல். 349). 2. கடல் (பிங்.).

ஆர்கலி = 1. ஓசை நிறைந்த கடல். (திருவாச. 18 2). 2. வெள்ளம் (நெடுநல். 3)

‘கலின்’, ‘கலீர்’ முதலியன ஒலிக்குறிப்புச் சொற்கள்.

ஒல் - சொல் = 1. ஒலி. 2. ஒலிவடிவான பேச்சு. 3. மொழி யுறுப்பான கிளவி.