உமி - உமிழ். ம. உமி, உமிழ்; தெ. உமியு, து. ubbi. உவமை - உவமம் - உவமன். உம் - உவ் - உவ - உவமை = ஒப்பு. உவமை - உவமி. உவ - உவமானம் - உவமானி. ம் - வ். ஒ.நோ. அம்மை - அவ்வை, செம்மை - செவ்வை. உவமை - உபமா (வ). உவமானம் - உபமான (வ). உவத்தல் = உளத்தாற் பொருந்துதல், விரும்புதல். உம் - உன் - உன்னு, உன்னுதல் = பேச இதழ் (உதடு) கூட்டுதல். பேச வுன்னுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ம் - ன். ஒ. நோ :. அம்மை - அன்னை, நிலம் - நிலன். உன் - உன்னியம் = சொந்தம். உன்னியம் - உன்னியன் = சொந்தக்காரன். உன்னியர் = சுற்றத்தார். உவ - உக. உகத்தல் (1) = விரும்புதல். வ் - க். ஒ.நோ: சிவப்பு - சிகப்பு, ஆவா - ஆகா (இடைச்சொல்). உகத்தல் (2) = இணைதல். உக - உகம் = நுகம், இணை. OE. geoc, E. yoke, OHG, G. Joch, OS., Goth. juk, ON. ok, L. jugum, Skt. yuga. உன் - உல் - உர். ன் - ல். ஒ. நோ : திறன் - திறல், செய்வன் - செய்வல். ல் - ர். ஒ. நோ : குடல் - குடர், பந்தல் - பந்தர். உர் - ஊர் = கூட்டமான மக்கட் குடியிருப்பு. ம. ஊர், க. ஊர், தெ. ஊரு, து. ஊரு. ஊர்தல் = நிலத்தொடு அல்லது உடம்பொடு பொருந்தி நகர்தல். ம.ஊர். உர் - உரம் = பொருந்தித் தழுவும் மார்பு, செறிவால் ஏற்படும் திடம், உறுதி, வலிமை. ம. உரம் = வலிமை. Skt. uras = மார்பு. உர் - உர - உரசு. உரசுதல் = பொருந்தித் தேய்த்தல். |