பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

7

‘உய்’ என்னும் வேர்ச்சொல்

உய் (செல்லுதற் கருத்து வேர்)

உ - உய்

உய்தல் (த.வி.) = 1. முற்செல்லுதல், செல்லுதல். 2. நீங்குதல். “தாவ லுய்யுமோ” (பதிற். 41 17). 3. துன்பத்தினின்று தப்புதல். “சார்புடைய ராயினும் உய்யார்” (குறள். 900). 4. ஈடேறுதல். “தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ” (தேவா. 5 1). 5. பிழைத்தல், வாழ்தல். “உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டி”. (புறம். 181). M. uy.

உய்த்தல் (பி.வி.) = 1. செலுத்துதல். “நன்றின்பா லுய்ப்ப தறிவு” (குறள். 422). 2. படைக்கலம் விடுத்தல். “அம்புய்க்கும் போர்” (கம்பரா. மாரீச. 186). 3. நடத்துதல். “உய்த்திடு மிச்சை செய்தி” (சி. சி. சி. சி. 1 62 நிரம்ப). 4. அனுப்புதல். “பட்டிமை யோலை யுய்ப்பான்” (திருவிளை. மெய்க்கா. 13). 5. கொண்டு போதல். “கோட்டுவ ருய்த்தன ரோவென” (சீவக. 425). 6. ஆட்சி செலுத்துதல். “ஞாலமுழுது முய்த்திடு மகவு” (பாரத. சம்பவ. 10). 7. கொடுத்தல். “மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று” (பு. வெ. 3 9, கொளு). 8. அறிவித்தல். “அவ்வழி யரசற் குய்த்தார்க்கு” (சீவக. 1407). 9. நீக்குதல். “பல்விளக் கிருளின் துன்னற வுய்க்கும்” (திருக்கோ. 175). 10. ஈடேறச் செய்தல். “உய்த்த வியோம ரூபர்” (சதாசிவ. 29). 11. நுகர்தல், பட்டறிதல். “காதல காத லறியாமை யுய்க்கிற்பின்” (குறள். 440). K., M. uy. 12. மதியைச் செலுத்தி ஆராய்தல்.

உய்த்தறிதல், உய்த்துணர்தல், உய்த்தலில் பொருண்மை என்னும் தொடர்களை நோக்குக.

உய்தி = 1. நீங்குகை (புறம். 34, உரை). 2. கழுவாய் (பரிகாரம்) “செய்தி கொன்றார்க் குய்தி யில்லென” (புறம். 34). 3. ஈடேற்றம். “சார்பறுத் துய்தியும்” (மணிமே. 25 5)