பக்கம் எண் :

57

இர் என்பனவும்; எல்லி, எரி, என்னும் சொற்கட்கு மூலமான எல், எர் என்பனவும்; ஒன்றோடொன்று தொடர்புடையனவாய், உல் என்னும் அடி வேரினின்று தோன்றி, நெருப்பையோ, நெருப்பின் நிறத்தையோ, அந் நிறமுள்ள பொருள்களையோ, உணர்த்து மென்பதும்; அரத்தம், அரக்கு, அலத்தகம் என்னும் சொற்கள் இலந்தை, இரத்தி என்பன போன்றே தூய தென்சொற்கள் என்பதும்; இதுகாறும் கூறியவற்றால் தெற்றெனத் தெரிந்து கொள்க.

அரக்கு என்பது சிவப்பு நிறத்தையும், அரக்கம் என்பது அரக்கு, அரத்தம் முதலிய செந்நிறப் பொருள்களையும் குறிப்பதனாலும்; அமெரிக்கப் பழங்குடி மக்களுள் ஒருசாரார் செவ்விந்தியர் எனப்படுவதாலும்; அரக்கர் என்னும் வகுப்பார் பழங்காலத்தினராகத் தொல்கதைகள் கூறுவதனாலும், அரக்கன் என்னும் பெயர் செந்நிறம் பற்றிய அரக்கு என்னுஞ் சொல்லினின்று திரிந்திருப்பதாக அறிஞர் சிலர் கருதினர். அஃது அரக்கு என்னும் வினைச் சொல்லினின்று திரிந்ததாகும். அரக்குதல் = வருத்துதல், அழித்தல். “எல்லரக்கும் அயில்நுதிவே லிராவணனும்” (கம்பரா. ஊர்தேடு. 230). அரக்குகின்றவன் அரக்கன்; அரட்டுகின்றவன் அரட்டன் என்பது போல். அரக்கரெல்லாம் மக்களை வருத்தினவராகவே கூறப்படுவர். அரக்கன் என்பது மீட்டல் (இரட்சித்தல்) என்று பொருள்படும். ரக்ஷஸ் என்னும் வடசொல்லினின்று திரிந்ததன்று.