பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

உள்கு - உட்கு. உட்குதல் = 1. அஞ்சுதல். K. ugi. ‘உல்’ (உ) என்னும் வேர்ச்சொல். “நண்ணாரும் உட்குமென் பீடு” (குறள். 1088). 2. நாணுதல். “சேரன் ............ உட்காதே” (தமிழ்நா. ஒளவை).

உட்கு - உக்கு. ஒ. நோ : மட்கு - மக்கு.

உக்குதல் = 1. மெலிதல். துயரத்தால் மெலிதலை உக்கிப் போதல் என்பர். 2. உளுத்தல், உரங்கெடுதல்.

உக்கின மரம் என்பது உலக வழக்கு. M. ukku.

உக்கு - உக்கம் = ஒடுங்கிய இடை. M. ukkam.

“உக்கஞ் சேர்த்திய தொருகை”    (திருமுருகு. 108)

உக்கல் = 1. உளுத்தது. 2. பதனழிவு.

உக்கம் - உக்கல் - ஒக்கல் = இடுப்பு (எனினுமாம்).

உக்கல் - உக்கலை - ஒக்கலை = இடுப்பு (எனினுமாம்).

M. ukkal.

உக்கி = இருகாதையும் இரு கையால் மாறிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தெழும் தோப்புக்கரணம் என்னும் தண்டனை வகை.

உக்கிடு = நாணத்தைக் குறிக்கும் குறிப்புச் சொல்.

உடுக்கு - இடையொடுங்கு பறை.

உடுக்கு - உடுக்கை = இடையொடுங்கு பறை.

“நிலையாய் உடுக்கை வாசிப்பான்”      (S. I. I. Vol. II, 254)

உடுக்கை - Skt. Hudukka.

உடு - இடு - இடை = ஒடுங்கின அல்லது சிறுத்த உறுப்பு.

இடு - இடுப்பு = இடையின் பக்கம்.

இடு - இடுகு. இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல்.

இடுகு - இடுக்கு = ஒடுங்கிய இடைவெளி.

இடுக்கு - இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி

இடுக்குதல் = ஒடுக்கி அல்லது நெருக்கிப் பிடித்தல்.

இடுக்கு - இடுக்கி = நெருக்கிப் பிடிக்கும் கருவி.

இடுக்கம் = நெருக்கம், இடைவெளி யொடுக்கம்.

இட்டளம் = நெருக்கம், தளர்வு.

“பரமபதத்தில் இட்டளமுந் தீர்ந்தது”      (ஈடு, 3 8 2)