சுட்டிப்பயல் = குறும்பு செய்யும் பையன். சுட்டி - சுட்டிகை = மகளிர் நெற்றியணி. “சூளிகையுஞ் சுட்டிகையும்’’ (பதினோ. ஆதியுலா. 68). சுட்டிகை - சுடிகை = 1. நெற்றிச்சுட்டி (திவா.). 2 நெற்றிப் பொட்டு (திவா.). 3. தலையுச்சி (திவா.). 4. மயிர்முடி (திவா.). 5. சூட்டு. “பஃறலைச் சுடிகை மாசுணம்’’ (கந்தபு. திருநாட்டுப். 19). 6. மகுடம் (திவா.). சுடிகை - வ. ஜு ட்டிக்கா. சூள் - சூடு. சூடுதல் = வளைதல், வளைந்திருத்தல். “வண்டிச் சக்கரம் சூடியிருக்கிறது.’’ (நாஞ்சில்நாட்டு வழக்கு). சூடு = வட்டமாக அடைந்த கதிர்ச்சாணை. சூடு - சூடகம் = வளையல். “பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும்’’ (பெருங். வத்தவ. 12 210). க. சூடக (g), து. சூடக (c) (g), தெ. சூடிகமு (g). சூடு - சூட்டு = 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச் சூழத் தைக்கப்பட்ட வளைவுச் சட்டம். “கொழுஞ்சூட் டருந்திய திருந்து நிலை யாரத்து’’ (பொரும்பாண். 46). 2. பூமாலை. “மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க’’ (பெருங். உஞ்சைக். 46 233). 3. நெற்றிப் பட்டம். “செம்பொற் சூட்டொடு கண்ணி’’ (சீவக. 2569). 4. மகளிர் நுதலணி (பிங்.). 5. பறவைகளின் உச்சிக்கொண்டை. “காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல்’’ (பெருங். உஞ்சைக். 52 62). 6. பாம்பின் படம். “செங்க ணாயிரஞ்சூட் டராவி னறிதுயி லமர்ந்து’’ (கூர்மபு. வருணாச். 3). 7. அம்பு விடும் அறை. “இடுசூட் டிஞ்சியின்’’ (பு.வெ. 6 18, கொளு). சுடிகை - சூடிகை = 1. மணிமுடி (பிங்.). 2. கோபுரக் கும்பம். “சூட னீத்தன சூடிகை சூளிகை’’ (கம்பரா. பள்ளி. 24). சூடிகை - வ. சூடிகா (c, k). சூள் - சாள் - சாளை = வட்டமான குடிசை (கோவை வழக்கு). சாளை - சாளையம் = வளைவு. சாளையக்கை = பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகிய மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டுவிரல்களின் நுனி உள்ளங்கையிற் படும்படி வளைத்து, விரல்கட்குள் இடைவெளி தோன்றச் செய்து மணிக்கட்டை வளைத்துக் காட்டும் நளி நயக்கை (பரத. பாவ. 24). சாளை - சாணை = 1. வட்டமான கதிர்ச்சூட்டு (நெ. வ.). 2. சருக்கரை முதலியவற்றால் வட்டமாய்ச் சுட்ட பணியார வகை |