சாரல் - சேரல் - சேரலன் = சேரன். “சேரலர் சுள்ளியம் பேரியாற்று’’ (அகம். 149). குடமலைநாடு சேரனுக்கே சிறப்பாக வுரியதாயிருந்தமை யையும், அதனால் மலையன், மலையமான், பொறையன், வானவன், வானவரம்பன் என்னும் பெயர்கள் அவனுக்கு வழங்கியமையையும், நோக்குக. சேரலன் - சேரன். “சேரன் பொறையன் மலையன் றிறம்பாடி’’ (சிலப். வஞ்சி. ஊசல்வரி, 2). சேரலன் - சேரல். “குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு’’ (சிலப். பதி. 2). சேரலன் என்ற பெயர் ஈறுகெட்டுச் சேரல் என நின்றது. ஒ.நோ : பாண் (பாட்டு)- பாணன் (பாடல் தொழிலான்) - பாண் = பாணர் குலம். சேரலன் - சேரலம் - ம. கேரளம் - வ. கேரல. சேரலன் - கேரளன் =1. சேரன் (திவா.). 2. சேரநாட்டான். “வெற்றிக்கொடிக் கேரளர்’’ (பாரத. வெளிப்பா. 21). சார் - சேர். சேர்தல் = சென்றடைதல், கூடுதல், பொருந்துதல், திரளுதல். ம. சேருக, க., து. சேரு, தெ. சேரு (c). சுல் - சுர் - சுரி. சுரிதல் = 1. சுழிதல், “வெள்ளைச் சுரிசங்கொடாழி யேந்தி’’ (திவ். திருவாய். 7 3 1). 2. கடைகுழலுதல். “சுரியிரும் பித்தை’’ (பொருந. 160). 3. மடிப்பு விழுதல். சுரித்தல் = 1. சுழிதல். 2. சுருளுதல். 3. வளைந்து கிடத்தல். “சுரிக்கு மண்டலந் தூங்குநீர்’’ (கம்பரா. தேரேறு. 30). 4. திரைதல். 5. மனஞ் சுழலுதல். “சுரிச்சிராதுநெஞ்சே யொன்று சொல்லக் கேள்’’ (தேவா. 369 :3). சுரி = 1. சுழி. “சுரியேறு சங்கினாய்’’ (திவ். இயற். 3 :49). 2. எருதின் நெற்றி வெள்ளைச் சுழி. “சுரிநெற்றிக் காரி’’ (கலித். 101). 3. சுழற்சி. 4. அணியுறுப்பு வகை. “உருத்திராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின்சுரி’’ (S. I. I. Vol. II, 156 : 39) சுரித்த மூஞ்சி = 1. வெறுப்பை அல்லது சினத்தைக் காட்டும் முகம். 2. மூப்பினால் திரைந்த முகம். |