பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

க. ஜரகு, தெ. த்ஜாரு.

சருக்கு - சருக்கம் = வட்டம் (L. circum), நூற்பிரிவு. ஒ.நோ : மண்டலம் = வட்டம், நூற்பிரிவு.

சருக்கம் - வ. ஸர்க (g). வடமொழியாளர் இச் சொல்லை ஸ்ருஜ் என்னும் சொல்லொடு பொருத்திக் காட்டுவர். அதற்கு விடு, எறி, வீசு, வெளிவிடு என்ற பொருள்களேஉண்டு.

சருக்கு - சருக்கரம் - சக்கரம். சக்கரம் = 1. வட்டம் (பிங்.). 2. உருளி (சூடா.). 3. குயவன் சக்கரம் “சக்கரந்தான் சுழற்றத்தகுங் குயத்தி’’ (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6). 4. சக்கரப் படைக்கலம். “சக்கரக்கை மன்னுயிர் முதல்வன்’’ (மணிமே. 13 57). 5. ஆட்சிச் சக்கரம். “வழுக்கில் சக்கரம் வலவயினுய்க்கும்’’ (பெருங். வத்தவ. 5 106). 6. சக்கரக் கட்டு (சக்கர பந்தம். தண்டி. 94). 7. சக்கர மாற்று. “சக்கரஞ் சீர்த்தமிழ் விரகன்’’ (தேவா. 146 12). 8. சக்கர அணிவகுப்பு (சீவக. 757, உரை). 9. பழைய வெள்ளிக் காசுவகை. “சால்பு திருவையாற்றுச் சக்கரமென்றும்’’ (பணவிடு. 14). 10. சக்கரவடிவம் பொறித்த காசு. 11. ஒரு நெசவுக்கருவி. 12. கொலைத் தண்டனைச் சக்கரம். 13. சகோரப்புள் (சூடா.). 14. திரிகை. 15. செக்கு. “தயில வினைத்தொழின் மரபிற் சக்கரப் பாடித் தெருவு’’ (பெரியபு. கலியனா. 5). 16. சக்கரவாளம். 17. ஞாலம் (பிங்.). 18. கடல் (சூடா.). 19. பிறவித் தொடர்ச்சி (சூடா.). 20. அறுபதாண்டுக் காலம்.

செக்கு வட்டமாயிருத்தலாலும் வட்டமாய் எள்ளாடுதலாலும் சக்கரம் எனப்பட்டது. செக்காரக் குடியைச் “சக்கரப்பாடித் தெருவு’’ என்று பெரியபுராணம் கூறுதல் காண்க.

சக்கரம் (ஆழி) - Gk. kuklos, E. cycle. வ. சக்ர (c). சருக்கரம்- சருக்கரை - சர்க்கரை - சக்கரை = வட்டமாக வார்க்கப்பட்ட வெல்லக்கட்டி.

ஒ.நோ : வட்டு = வட்டமான கருப்புக்கட்டி.

சருக்கரம் - சருக்காரம் - சக்காரம் (மூ. அ.)= சருக்கரைபோல் இனிக்கும் தேமா. இன்றும் சர்க்கரைக்குட்டி என்று ஒரு மாங்கனிப்பெயர் வழங்குதல் காண்க.

சக்காரம் - அக்காரம் = சருக்கரை. “அக்கார மன்னார்’’ (நாலடி. 374).

அக்காரடலை (அக்காரவடலை), அக்காரவடிசில் என்பன சருக்கரைப் பொங்கல் வகைகள்.