சகடம் - சகோடம் = 16 நரம்பு கொண்ட யாழ் (சிலப். 3:26, உரை). சகோடம் - சகோரம் = சக்கரப்புள் (திவா.). சகோரம் -வ. சக்ர. சக்கு - சங்கு = 1. உள் வளைந்துள்ள நந்துக்கூடு. “சங்குதங்கு தடங்கடல்’’ (திவ். பெரியதி. 1:8: 1). 2. சங்கு வடிவான ஐம்படைத்தாலி யுரு (சூடா.). 3. சங்குவடிவான வரை (திவா.). 4. சங்கினாற் செய்த கைவளை. “சங்கமரு முன்கை மடமாதை’’ (தேவா. 89: 1). 5. சங்கு போன்ற ஊட்டி என்னும் மிடற்றுறுப்பு. 6. மிடற்றில் இயல்பாகஎழும் குரல் என்னும் இசை (திவா.). 7. சங்கு வளைவுகளால் அல்லது முட்களால் ஏற்பட்ட பேரெண். “சங்குதரு நீணிதியம்’’ (சீவக. 493). 8. பேரெண் கொண்ட போர்ப்படை (சூடா.). 9. பெருவிரல் நிமிர மற்ற நால்விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப். 3:18, உரை). சங்கு வடிவான தலையுடைய கோழி (அக. நி.). ம. சங்கு. சங்கு உள்வளைந்திருப்பதால் - கோடு, சுரிமுகம், புரி, வளை, வாரணம் என்னும் அதன் பெயர்களெல்லாம் வளைவுக் கருத்தையே வேர்ப் பொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. வலம்புரி = வலமாக வளைந்தது. இடம்புரி = இடமாக வளைந்தது. சங்கு - சங்கம் = 1. பெரிய சங்கு. “அடுதிரைச் சங்க மார்ப்ப’’ (சீவக. 701). 2. சங்குக் கைவளை. “சங்கங் கழல’’ (இறை. 39, உரை). 3. ஊட்டி (குரல்வளை). 4. இலக்கங்கோடி என்னும் எண். “நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும்’’ (பரிபா. 2 :13). 5. 2187 தேரும் 2187 யானையும் 6571 குதிரையும் 10, 935 காலாள்களுங் கொண்ட போர்ப்படை (பிங்.). 6. பேரெண் கொண்ட பொக்கசம். சங்கம் -வ. சங்க (kh). ‘சக்கரம்’ முதல் ‘சங்கு’ வரை குறிக்கப்பட்ட சொற்களெல்லாம் வளைவுக் கருத்தடிப்படையில் ஒரே தொடர்புடையனவாயிருத்தல் காண்க. சக்ர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளராற் குறிக்கப்பட்டுள்ள மூலம் க்ரு (செய்) என்பதே. மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி சர் (car) என்னும் சொல்லை வினாக்குறிப்புடன் குறித்துள்ளது. இவ் விரண்டுள், முன்னதன் பொருந்தாமையையும் பின்னதன் வன்புணர்ப்புத் தன்மையையும், அறிஞர் கண்டு கொள்க. மா. வி. அ. ‘‘Of doubtful derivation’’ என்று குறித்திருத்தலையும் நோக்குக. |