முண்டக நல்யாழ்’’ (ஆசிரியமாலை). தொண்டு + பத்து = தொண்பது - ஒண்பது - ஒன்பது. தொண்டு = 9. தொண்பது + ஆயிரம் = தொள்ளாயிரம் (900). தொண்டு என்னும் முதலாம் இடத்து எண்ணுப் பெயர் வழக்கு வீழவே, அதற்கு மேற்பட்ட இடத்து எண்ணுப் பெயர்களெல்லாம் ஒவ்வோரிடம் முறையே தாழ்ந்துவிட்டன என அறிக. “தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே’’ (செய். 100) என ஒரே தொல்காப்பிய நூற்பாவில், பண்டைப் பெயரும் பின்றைப் பெயரும் வந்திருத்தல் காண்க. தொண்டு - தொண்டி = துளை. தெ. தொண்டி. தொண்டு - தொண்டலம் = 1. நீண்ட துளையுள்ள யானைத் துதிக்கை. “சூர்மகனுந்து தொண்டலம் பற்றி’’ (கந்தபு. அமரர்சி. 83). 2. யானைத் துதிக்கை போன்ற கம்மாலை இறைவைக் கூனைத் தோல்வால். தொண்டலக்குழி = இறைவைக் கூனைநீர் வால் வழியாக விழும் பள்ளம். தொண்டலம் - ப. க. தொண்டில் = யானைக்கை. வ. சுண்டா (cunda). தொண்டு - தொண்டை = 1. மிடறு (பிங்.). throat, gullet. 2. குரல்வளை;windpipe, larynx. 3. குரல்; voice, singing voice. அவனுக்கு நல்ல தொண்டை, கந்தனுக்குக் கீச்சுத் தொண்டை (உ. வ.). 4. யானைத் துதிக்கை (பிங்.). “கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள்’’ (திருப்போ. சந். அலங்கா. 18). ம. தொண்ட, து. தொண்டெ. தொள் - தொட்டி = 1. நீர்த்தாழி. 2. பூஞ்செடிக்கலம். 3. நீர்த்தொட்டி. “துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி’’ (பரிபா. 20 51). 4. மாட்டிற்குத் தீனிவைக்குங் காடி. 5. குப்பைத் தொட்டி. 6. பிடிகை (அம்பாரி). 7. வீட்டு நடுவிலுள்ள திறந்தவெளி. நடுவில் வானவெளியுள்ளது தொட்டிக்கட்டு வீடெனப் படும். ம., தெ., க., து. தொட்டி. தொட்டி - தொட்டில் = குழந்தைகட்குத் தொட்டி வடிவில் மரத்தாற் செய்தசிறு தொங்குகட்டில். ‘இல்’ ஒரு சிறுமைப்பொரு ளீறு. எ-டு: புட்டி - புட்டில், விட்டி - விட்டில். |