தூர் = கிணற்றை யடைக்கும் சேறு செத்தை. தூர் = தூர்வை. “தானே வந்தாலுந் தூர்வை யெடுக்க வொண்ணாது’’ (திவ். இயற். திருவிருத். 12, வியா. 85). தூர் - தூரி = மீன் தங்கி நீர்மட்டும் துருவிச் செல்லும் மீன்பொறி. தூர் - தோர் - தோரணம் = தெருவில் துருவக் (குறுக்காகக்) கட்டும் சுவடிப்புத் தொங்கல். தொள் - தொள. தொளதொளத்தல் = துளையுண்டதுபோல் நெகிழ்தல். தொள - தொளர் - தளர். தளர்தல் = 1. நெகிழ்தல். 2. கட்டுக் குலைதல். “தாழாத் தளராத் தலைநடுங்கா’’ (நாலடி. 14). 3. சோர்தல். “தளர்ந்தே னெம்பிரா னென்னைத் தாங்கிக் கொள்ளே’’ (திருவாச. 6 1). 4. நுடங்குதல். 5. மனங்கலங்குதல். 6. உயிரொடுங் குதல். “தகை பாடவலாய் தளர்கோ தளர்கோ’’ (சீவக. தொள் - தொய். தொய்தல் = 1. தளர்தல். 2. சோர்தல். “தொய்யுமான் போலத் துவக்குண்டேன்’’ (விறலிவிடு. 107). 3. துவளுதல். “தொய்யு மரவணைக்குள்’’ (திருப்பு. 1173). 4. இளைத்தல். 5. வாடுதல். 6. தொங்குதல். 7. கெடுதல். “தொய்யா வெறுக்கை யொடு’’ (பெரும்பாண். 434). தொய் - தொய்யகம் = தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. “தொய்யகந் தாழ்ந்த கதுப்பு’’ (கலித். 28). துல் - துன் - தும்பு = துளைத்தாற்போல் வருத்தும் நிலைமை. துன்பு -துன்பம். துன்பு - தும்பு = வரம்பு கடந்த நடத்தை, கடுஞ்சொல். ஒ.நோ : வன்பு - வம்பு. வம்பு தும்பு என்பது மரபிணை மொழி. துல் - தொல் - தொல்லை = துன்பம், இடர்ப்பாடு. தொண்டு = தொழில், பணிவிடை, அடிமை வேலை. தொண்டு - தொண்டன் = பணிவிடைக்காரன், திருவடியான். தொழீஇ = 1. தொழில் செய்பவள் (கலித். 103). 2. பணிப்பெண். “தொழீஇயுட னுண்ணார்’’ (சிறுபஞ். 38). serve, servant, service, servitude. servility, serf என்னும் உயர் சொல்லும் இழிசொல்லும், servus (L.). என்னும் ஒரே சொல்லினின்று தோன்றியிருத்தலை நோக்குக. |