பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

கூடு - கூட்டல். கணத்தல் = கூடுதல். கண - கணக்கு = கூட்டு, கூட்டுத்தொகை, மொத்த அளவு, அளவு, வரம்பு, கூட்டற்கணக்கு, கணக்கு. கணக்கு - கணக்கன், கணக்கப்பிள்ளை.

7. புணர்ச்சி

காதலன் காதலியர் மெய்யுறக் கூடல் புணர்ச்சி. “பெரிதாற்றிப்பெட்பக் கலத்தல்’’ (குறள். 1276). “கலவியான் மகிழ்ந்தாள்போல்’’ (சிலப். 7 24, கட்டுரை). “கூடலிற் காணப் படும்’’ (குறள். 1327). “காமக் கூட்டங்காணுங் காலை’’ (தொல். பொருள். கள. 1). கணவன் = கூடுவோன். கடுவன் = ஆண்குரங்கு.

8. பொருத்து

கூளி = பொலிகாளை. உறுப்புகள் அல்லது அவற்றின் பகுதிகள் ஒன்றோடொன்று கூடுவது பொருத்தாகும். கலவு = உடலின் மூட்டுவாய். “கலவுக்கழி கடுமுடை’’ (அகம். 3).

கள் - களம் = உடல் முண்டத்தைத் தலையொடு பொருத்தும் உறுப்பாகிய1. கழுத்து. 2. தொண்டை. “பாடுகள மகளிரும்’’ (சிலப். 6 157). கள் - (கண்டு)- கண்டம் = கழுத்து, தொண்டை. “காராருங் கண்டனை’’ (தேவா. 1071 1).

களம் - வ. gala. L. collum. கண்டம் - வ. கண்ட (kantha.)

கண் - கணு. கட்டு - கட்டாணி = அணிகளின் கடைப் பூட்டாணி. குயில்- கயில் = பூண்கடைப்புணர்வு (திவா.). கயில் - கயிறு = கட்டுவது. ம. கயறு.

9. நெயவு

நெடுக்கிழையுடன் ஊடையைப் பொருத்திப் பின்னுவது நெயவு. குயிலுதல் = 1. நெய்தல். “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’’ (தொல். சொல். 74, உரை). 2. பின்னுதல். குயில் - குயினர் = தையற்காரர் (பிங்.). கோடி - கோடிகம் = ஆடை. கோடிகர் = ஆடை நெய்வோர் (பெருங். இலாவாண. 8 :67)

10. போர்

மாறுபட்ட இருவர் அல்லது இரு கூட்டத்தார் கலந்தே போர் செய்வர். கைகலத்தல்என்னும் வழக்கை நோக்குக. கல - கலகு = கலகம். கலகித்தில் = கலகஞ்செய்தல். கலகம்- கலாம். கலாய்த்தல் = சினத்தல், மாறுபடுதல். கலாவுதல் = சினத்தல். கலாவு - கலாவம்- கலாபம் = கலகம். ஐதர் கலாபம். கலாபித்தல் - கலகஞ்செய்தல். கலாபி - கலாபனை- தெ. கலாபன. கூட்டம் = போர் (திவா.).