கார் - கார்ப்பு = உறைப்பு (சூடா.). காள் - காய். காய்தல் = செ. குன்றியவி.) 1. வெயில் நிலா எறித்தல். நிலாக் காய்கிறது. (உ. வ.). 2. நீர் சூடாதல். வெந்நீர் காய்கிறது. (உ. வ.). 3. உடம்பு சுடுதல். உடம்பு காய்கிறது. (உ. வ.). 4. உணத்தல். புழுங்கல் காய்கிறது. (உ. வ.). 5. ஈரம் புலர்தல். வேட்டி காய்கிறது. (உ. வ.). 6. பயிர் வெயிலால் வாடுதல். 7. வயிறு பசியால் எரிதல். 8. புண் ஆறி வருதல். 9. வறுமையால் வருந்துதல். 10. இளைத்தல். “காய்தலு முண்டக் கள்வெய் யோனே’’ (புறம். 258). (செ. குன்றாவி.) 1. எரித்தல். “மதவேள்தன் னுடலங் காய்ந்தார்’’ (தேவா. 15 6.) 2. அழித்தல். “கஞ்சனைக் காய்ந்தானை’’ (திவ். பெரியதி. 7 6 5). 3. விலக்குதல். “கோப முதலிய குற்றங் காய்ந்தார்’’ (பெரியபு. அப்பூதி. 2). 4. வெறுத்தல். “காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல்’’ (அறநெறி. 22). 5. கடிந்து கூறுதல். “கறுத்தெழுந்து காய்வா ரோடு’’ (நாலடி. 315). 6. வருத்துதல். “காய்கின்ற பழவினை போம்’’ (குற்றா. தல. நூற்பய. 15). ம. காய், க. காய், தெ. காயு, து. காயி. காய் - காய்ச்சல் = 1. வெம்மை. 2. சுரநோய். 3. உலர்ச்சி. அரிசிநல்ல காய்ச்சல். (உ. வ.). 4. வறட்சி. 5. வறுமை. காய்ச்சுதல் = 1. குழம்பு சமைத்தல். 2. இரும்பை நெருப்பிற் பழுக்க வைத்தல். 3. ஈயத்தை உருக்குதல். காய்த்து - காய்ச்சு. காய் - காயம் = 1. வெந்த கறித்துண்டு. “நெய்கனி குறும்பூழ்காயமாக’’ (குறுந். 389). 2. உறைப்பு (பிங்.). 3. மிளகு. “காயத்தின் குழம்புதீற்றி’’ (சீவக. 788). 4. கறிக் கூட்டுச்சரக்கு. “காயங்களான் இனிய சுவைத்தாக்கி’’ (குறள். 253, உரை). 5. ஈருள்ளி. “காயமுங் கரும்பும்’’ (சிலப். 25 45). 6. பெருங்காயம். ம. காயம், தெ. காயமு. ஐங்காயம் = கடுகு, வெங்காயம், பெருங்காயம், ஓமம், வெந்தயம். காய் - காய்ந்து - காந்து. காந்துதல் = 1. (செ. குன்றியவி.) வெம்மை கொள்ளுதல். 2. ஒளிவிடுதல். “பரம்பிற் காந்து மினமணி’’ (கம்பரா. நாட்டுப். 7). 3. எரிவெடுத்தல். கண்காந்துகிறது. (உ. வ.). 4. சமையு முணவு கருகுதல் சோறு காந்திப்போயிற்று. (உ. வ.). 5. மனங் கொதித்தல். “புத்தி போய்க் காந்துகின்றது’’ (கம்பரா. சடாயுகா. 37). 6. பொறாமை கொள்ளுதல். அவனைக் கண்டு காந்துகிறான் (உ. வ.). |