3. பிளத்தல். “நெடுங்கிரி கிழித்து’’ (கம்பரா. நிகும். 88). 4. முறித்தல். 5. கண்டித்தல். ‘சிலவசனங்கள் சொல்லிக் கிழிப்பதும்’’ (கவிகுஞ். 2). 6. திறத்தல். “வாயுழுவை கிழித்தது’’ (திருக்கோ. 72). 7. தோற் கடித்தல். 8. கோடு கீறுதல். 9. அழித்தல். ம. கிழி. E. cleare, OE. cleof, OS., OHG. kliop, ON. kljuf. கிழி = 1. கிழித்த துணி (திவா.) 2. துணியில் எழுதிய படம். “கிழிபிடித்து’’ (திருக்கோ. 74). 3. துணியில் முடிந்த பணமுடிப்பு (திவா.). கிழி - கிழியல் - கிழிசல் = கிழிந்தது. கிழி - கிழிதம் = பணமுடிப்பு. (திருக்கோ. 183, உரை). கிழிப்பு = 1. கிழிக்கை. 2. பிளப்பு. 3. குகை. “வரைக் கிழிப்பன்ன’’ (நற். 154). கிள் - கீள். கீளுதல் = 1. கிழித்தல். “கீண்டிலென் வாயதுகேட்டு நின்றயான்’’ (கம்பரா. அயோத். பள்ளி. 71). 2. உடைதல். “தெண்ணீர்ச் சிறுகுளங் கீழ்வது மாதோ’’ (புறம். 118:3). தெ. சீழ் (c). கீள் = 1. கூறு. “கீளிரண்டாகக் குத்தி’’ (சீவக. 2248). 2. துணியா லான அரைநாண். “வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று’’ (தேவா. 811:2). கீளுடை (இலங்கோடு). “கீளுடையான்’’ (காளத். உலா, 500). கீள் - கீழ். கீழுதல் = 1. கிழித்தல். “பழம் விழுந்து... பஃறாமரை கீழும்’’ (திருக்கோ. 249). 2. பிளத்தல், “உறுகால் வரை கீழ்ந்தென’’ (சீவக. 1157). 3. தோண்டுதல். “வேரொடுங் கீழ்ந்து வௌவி’’ (சீவக. 2727). 4. சிதைத்தல். “கிழமையைக் கீழ்ந்திடா நட்பு’’ (குறள். 801). 5. கோடு கிழித்தல். 6. பறியுண்ணுதல். “மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென’’ (சூளா. சீய. 144). கீழ் - கீழ்க்கு - கிழக்கு = 1. பள்ளம் (திவா.). 2. கீழ், “காணிற்கிழக்காந் தலை’’ (குறள். 488). 3. கீழிடம். “கிளைஇய குரலே கிழக்குவீழ்ந்தனவே’’ (குறுந். 337). 4. பள்ளமான கீழ்த்திசை (திவா.). 5. இழிவு, “கிழக்கிடுபொருளொடு’’ (தொல். பொருள். 280). ம. கிழக்கு. கிழக்கு - கிழங்கு = நிலத்தின்கீழ் விளைவது. “கொழுங்கொடிவள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே’’ (புறம். 109; 6). ம. கிழங்ங. கிழங்கு - கிடங்கு = 1. பள்ளம். 2. குழி. 3. குளம் (சூடா.). 4. அகழி. “பூங்கிடங்கி னீள்கோவல்’’ (திங். இயற். முதற். 77). |