பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

‘வாரசூலை’ என இலக்கியத்தில் வழங்குகின்றது. சூலம் என்பதே உலகவழக்கு. “திங்கட்கிழமை தெற்கே சூலம்’’ என்றே மக்கள் கூறுதல் காண்க.

சூல் - சூலை = 1. ஒருசார் நோய். “அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வன்’’ (பெரியபு. திருநாவுக். 48). 2. கிழமைச் சூலம் (வாரசூலை). சூலை - சூலா (வ.).

சூலைநோயால் உண்டாகும் திருகுவலி சூலைக் குடைச்சல் எனப்படும்.

“அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையுமது
வடவனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம்
கொடியவெலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப்
படருழந்து நடுங்கியமண் பாழியறை யிடைவிழுந்தார்’’

என்னும் பெரியபுராணச் செய்யுளால் (திருநாவுக். 50); சூலை நோயின் குடைச்சல் வலியை ஒருவாறுணரலாம்.

சூல் (சூலம்) - சூலி = 1. சூலப்படை தாங்கிய சிவன். “சூலிதன்னருட்டுறையின் முற்றினான். ’’ (கம்பரா. கிட்கிந்தா. நட்புக். 37). 2. சூலப்படை கொண்ட காளி. “சூலிநீலி மாலவற் கிளங்கிளை’’ (சிலப். 12 68). சூலி (சிவன். - வ. சூலின். சூலி (காளி) - வ. சூலினீ.

சுல் - சுள். சுள்சுள்ளென்று குத்துகிறது என்பது உலகவழக்கு. சுள்ளாணி = முட்போன்ற சிறிய ஆணி.

சுள்ளெறும்பு = சுள்ளென்று கடிக்கும் செவ்வெறும்பு

சுள் - சுளி - சுளிக்கு = கூர்மையான முனையுள்ள கைக்கோல். க. சுளிக்கெ.

சுள் - சுளு - சுளுகு = 1. நுண்ணறிவு. 2. சதுரப்பாட்டுப் பேச்சு. 3. வலக்காரச்சொல். “சுளுகுகள் விவரமொ டுரையிடுவார்’’ (திருச்செந். பு. செயந்திபுர. 55).

சுளுகன் = சதுரப்பாட்டுப் பேச்சாளன் (யாழ். அக.)

சுள் - சுண் - சுணை = 1. இலை காய் முதலியவற்றிலுள்ள சிறுமுள். 2. முட்குத்துப் போன்ற உணர்ச்சியுள்ள அம்மைக் கொப்புளம். 3. கூர்மை. ‘சுணையில்லாக் கத்தி’ (உ. வ.). 4. கூருகிராற் சொறிவு வேண்டும் தினவு. 5. நெஞ்சகத்திற் குத்தும் மானவுணர்ச்சி. “துகிலு மிழிந்து சுணையு மழிந்து’’ (பட்டினத். உடற்கூற்றுவண்ணம், 249). 6. கூரியஅறிவு.

சுணை (முள்) - ம. சுண, தெ. சொன.