சோம்பு - சோம்பல். சோம்பு - சோம்பன் = சோம்பேறி. சோம்பு- சோம்பி = சோம்பேறி. சோம்பேறு - க. சோமாரி. “காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு’’ (பழமொழி). சோம்பு = 1. மடிமை (தொல். பொருள். 260, உரை). 2. மந்தம். “சோம்பு தவிர்ப்பிக்கும்’’ (திருமந். 566). 3. தூக்க மயக்கம். 4. மயக்கம். ஒ.நோ : Gk. somnus (sleep). சும்பு - சும் = மடிமை. சும்மா (சும்மாக) = மடிமையாக, ஒரு வினையுஞ் சொல்லாமல், ஒன்றுங் கொடாமல், ஒன்றும் பெறாமல், ஒரு பயனுமின்றி, ஒரு கருத்துமின்றி, ஒரு நோவுமின்றி, ஒருவகை அச்சமுமின்றி, இக் கருத்துகளையெல்லாம் ‘சும்மாயிருத்தல்’ என்னும் மரபுச்சொல் உணர்த்துதல் காண்க. கொண்முடிபு (சித்தாந்த) நூலாரும் மெய்ப்பொருள் (தத்துவ) நூலாரும், இச்சொல்லை இருவகைப் பற்று மறுத்து முற்றத் துறந்த முழு முனிவரான ஓகியர் இருவினையுஞ் செய்யாது இறைவன் மேல் எண்ணத்தை நிலையாக நிறுத்தி அமைதியாயிருக்கும் இணையற்ற இன்ப நிலைமையைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். மௌன குருவடிகள் தாயுமான அடிகட்குச் ‘சும்மாயிரு’ என்று செவியறிவுறுத்தியதையும், அதை நினைந்து தாயுமான அடிகள், “....................................... வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாம லுலகத்து லாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம் சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு சரீரத்தினும் புகுதலாம் சலமே னடக்கலாங் கனன்மே லிருக்கலாம் தன்னிகரில் சித்திபெறலாம் சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே’’ என்று பாடியிருத்தலையும், நோக்குக. வெப்பத்தினால் மந்தமும் மடிமையும் உண்டாகுமாதலால், வெப்பக் கருத்தில் சோம்பற் கருத்துத் தோன்றிற்று. வெப்பக் காலத்திலும் வெப்ப நாட்டிலும் வினைமுயற்சி குன்றுவதையும், குளிர்காலத்திலும் குளிர்நாட்டிலும் அது மிகுவதையும், உலகியலை நோக்கிக் காண்க. |