பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

செஞ்சு - செஞ்சம் = 1. நேர்மை. 2. நிறைவு, முழுமை. “செஞ்சமுற வேறல் செயமென்று’’ (குற்றா. தல. திருமால். 114). இயல்பாக எல்லாரையுஞ் சுடவேண்டிய நெருப்பானது வாய்மை, குற்றமின்மை, கற்பு, தெய்வ நம்பிக்கை முதலிய பண்புகளை மெய்ப்பிக்கும் தெய்வச் சான்றாக நின்று சுடாதிருப்பதால், தீயின் நிறப்பண்பாகிய செம்மைக் கருத்தினின்று, தூய்மை அல்லது நேர்மைக் கருத்தும், நேர்மைக் கருத்தினின்று நிறைவுக் கருத்தும், கிளைத்தன.

செள் - செய் - செய்ம்மை = செம்மை (சிவப்பு).

செய்ய = 1. சிவந்த. “செய்ய தாமரைக ளெல்லாம்’’ (கம்பரா. நீர்விளை. 3). 2. செப்பமான, நேர்மையான, “செய்ய சிந்தைப் பேரரு ளாளர்’’ (கம்பரா. விபீடண. 128).

செய்யவள் = சிவந்த திருமகள். “செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்’’ (குறள். 167).

செய்யவன் = 1. சிவந்தவன். 2. சிவன். “செய்யவனே சிவனே’’ (திருவாச. 6:7). 3. செவ்வாய்க்கோள் (விதான. குணாகுண. 12). 4. கதிரவன் (W.).

செய்யான் = செம்பாம்பு (சித்தர். சிந்து).

செய்யாள் = 1. செங்கோலத் திருமகள். “செய்யாட் கிழைத்த திலகம் போல்’’ (பரிபா. 22. 4). 2. மூதேவியின் தங்கைபோன்ற தாயின் தங்கை (சிறியதாய்) - தஞ்சை வழக்கு.

செய்யான் = 1. சிவன். “செய்யானை வெண்ணீ றணிந்தானை’’ (திருவாச. 8: 13). 2. செம்பூரான்.

செய்யோள் = 1. செந்நிறமுள்ளவன். “எய்யா விளஞ்சூற் செய்யோள்’’ (பொருந. 6). 2. திருமகள். “செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம்’’ (பரிபா. 2 :31).

செய்யோன் = 1. செந்நிறமுள்ளவன். “செய்யோ னகளங்கன்’’ (பெருந். தொ. 817) 2. செவ்வாய். “மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ’’ (விதான. கர்ப்பா. 10).

செய் - செயல் - செயலை = சிவந்த அடியையுடைய அசோக மரம். “செயலைத் தண்டளிர்’’ (திருமுருகு. 207) என்னுந் தொடருக்கு, “சிவந்த அரையினையுடைய அசோகிற்குளிர்ந்த தளிர்’’ என்று நச்சினார்க்கினியர் பொருள் வரைந்திருத்தல் காண்க. “சேந்தசெயலை’’ (மலைபடு. 160) = சிவந்த அசோகமரம்.