பகு - பக்கு = 1. பிளப்பு (W.). 2. கவர் படுகை. “தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து” (தேவா. 17 3). 3. பை. “கழித்துக் கொண்டீ யெனத்தரலும்” (கலித். 65 14). 4. மரப்பட்டை (W.). 5. புண்ணின் அசறு (W.). 6. பல்லின் பற்று (W.). காய்ந்து போன மூக்குச் சளி (W.). சோற்றுப் பொருக்கு (W.). பக்கு (அசறு) - தெ. பக்கு. பக்கு (பை) - ஒ.நோ.: ME. bagge, E. bag, ON. baggi. OF. bague, Pr. bagua (baggage), med. L. baga (sack). பக்கெனல் = வெடித்தற் குறிப்பு. பக்கிடுதல் = வெடித்தல். பக்கிசைத்தல் = 1. விட்டிசைத்தல். 2. வேறுபடுத்திக் கூறுதல். “அதுவும் இதுவும்எனப் பக்கிசைத் தோதப்பட்ட” (சி. போ. சிற். 12 4 உரை). பக்குவிடுதல் = 1. பிளத்தல். “கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும்” (குறள். 1068). 2. தோலறுதல் (W.). பக்கு - பக்கறை = 1. பை. 2. துணியுறை. “ஏந்து வெள்ளைப் பக்கறை” (விறலிவிடு.). 3. குழப்பம் (யாழ். அக.). பகு - பக்கம் = 1. மருங்கு (side) “பக்க நோக்கி நிற்கும்” (திவ். திருவாய். 5 5 5). 2. அருகு (சூடா.). 3. இடம். “ஊழையும் உப்பக்கங் காண்பர்” (குறள். 620). 4. விலாப்புறம். 5. சிறகு. “இசைபடு பக்க மிருபாலுங் கோலி” (பரிபா. 21 31). 6. அம்பிறகு. 7. பொத்தகத்தின் ஒருபுறம். 8. பொத்தகம், நூல். “வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு” (தொல். அகத். 41). 9. பிறைக்கூறு. 10. பிறைநாள் (திதி). 11. வளர்பிறை அல்லது தேய்பிறைக்காலம். “பகலிராப் பக்கமே திங்கள்” (காஞ்சிப்பு. காயாரோகண. 2). 12. நட்பு. 13. அன்பு. 14. சுற்றம் “பக்கஞ் சூழ வடமீன் காட்டி” (கல்லா. 18). 15. சரவடி, வழிமரபு. 16. சேனை. “தாவரும் பக்க மெண்ணிரு கோடியின் தலைவன்” (கம்பரா. இலங்கைக் கேள்வி. 40). 17. தொழிற்றொகுதி. “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். புறத். 20). 18. கோட்பாடு. 19. தன்மை. “வாலிதாம். பக்க மிருந்தைக் கிருந்தன்று” (நாலடி. 258). 20. ஏரண மேற்கோள். “பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல்” (மணிமே. 29 59). 21. துணிபொருளுள்ளவிடம். “பக்கந் துணிபொருளுக் கிடமாம்” (சி.சி. அளவை. 9). 22. மறுதலை யுய்த் துணர்வு (அருத்தாபத்தி). 23.நாடு. பக்கம் - வ. பக்ஷ. ஒ.நோ.: L. pagus, country, district. |