பக்கம் எண் :

139

பாத்து = 1. பகுக்கை (சூடா.). 2. பங்கு (நாமதீப. 741). 3. பாதி (W.). 4. இணை. “பாத்தில் புடைவை யுடையின்னா” (இன். நாற். 3). 5. நீக்கம். “பாத்தில்சீர்ப் பதுமுகன்” (சீவக. 1845). 6. நான்கு என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக் குறி (W.).

நானிலம், நால்வகுப்பு, நாற்பா, நாற்பொருள், நால்வகை யுண்டி, நால்வகை யிசைக்கருவி முதலிய பல்வேறு பொருட் பாகுபாடும்; நாலா பேரும், நானா வகை என்னும் வழக்கும்; பகுத்தலைக் குறிக்கும் சொல்லை நான்கு என்று பொருள்படும் குழூஉக்குறி யாக்கின.

பாத்துப்புலு = நாற்பது என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி (W.).

பாத்து - பாத்தி = 1. பகுதி. “மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே” (தொல். தொகை. 30). 2. பங்கு (W.). 3. இறைவைப் புன்செய்ப் பகுதி, சிறு செய். “பாத்தியுள் நீர்சொரிந் தற்று” (குறள். 718). 4. சிறுவீடு (பிங்.).

., . பாத்தி.

பாத்திப் படுத்துதல் = நிலைபெறச் செய்தல். “பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு” (குறள். 465).

பாத்தி - பத்தி = 1. பாத்தி (W.). 2. செய்தித்தாள், பொத்தகம் முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி. செய்தித்தாள் பல பத்தி கொண்டது (உ.வ.). 3. வகுப்பு (W.). “வரிசை “பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்” (சிலப். 16 118). 4. முறைமை (சூடா.). 5. அழகு வேலைப்பாடு. “பத்திப் பல்வினை” (பெருங். இலாவாண. 6 55). 6. கடவுள்பாற் பட்ட பற்று. “பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்” (திருவாச. 2 119). 7. கடவுள் வழிபாடு (சூடா.). 8. அரசன், ஆசிரியன், தந்தை, கணவன், முனிவன் முதலிய பெரியோரிடத்து வைக்கும் பற்று அல்லது செய்யும் பணிவிடை.

பத்தி (வரிசை) - . பங்க்தி (pankti).

பத்தி (பெரியோர் மாட்டுப் பற்று) - . பக்தி (bhakti).

இங்ஙனம் இருவேறு வகையில் வடமொழியில் எழுதப்படுவதால், பத்தி என்பது இருவேறு சொல்லோ என்று ஐயுறற்க. பக்தி என்னும் சொல்லிற்கும் பாகம் என்னும் சொல்லிற்கும் வடமொழியாளர் பஜ் (bhaj) என்னும் ஒரே மூலங்காட்டுவதையும், பகு என்னும் முதனிலையினின்றே திரிந்துள்ள பக்கம் என்னும் சொல்லை அவர் பக்ஷ என்று திரிப்பதையும், நோக்குக.